இந்தியாவிலேயே மோசமான சாதி கட்சி விசிக: எச்.ராஜா!

இந்தியாவிலேயே மிக மோசமான சாதி கட்சி விசிக தான் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் எச்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

இந்துத்துவா கும்பல் திராவிட கட்சிகளை ஒழிக்க நினைக்கிறது என வைகோ கூறியிருக்கிறார். முதலில் மதிமுகவை ஒழித்தது யார் என்று அவர் சொல்லட்டும். இன்று மதிமுக என்ற கட்சியே காணாமல் போயிருக்கிறது. எனவே, திராவிட கட்சிகளை நீங்களே அழித்துக் கொள்ளும்போது, எங்களுக்கு ஏன் வேலை இருக்க போகிறது.

தமிழகத்தில் 5.6 கோடி முத்ரா கடன் வாங்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் கூறியிருப்பது, ஒருவரே பலமுறை கடன் பெற்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான். இதற்கும் மக்கள் தொகைக்கும் சம்பந்தம் இல்லை. முத்ரா கடன் வாங்கியவர்கள் அளவுக்கு கூட, பாஜகவால் தேர்தலில் வாக்குகளை பெற முடியவில்லை என்று கேட்கிறீர்கள். வாக்குகளையும் முத்ரா கடன் திட்ட பயனாளர்களையும் ஒப்பிட வேண்டாம். முன்பைவிட, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 80 லட்சம் ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. பாஜக வளர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே மிக மோசமான சாதிக் கட்சி விசிக தான். திருமாவளவன் பட்டியல் சமுதாய மக்களுக்கான தலைவர் கிடையாது. தேவேந்திர குல வேளாளர் மக்கள் விசிகவின் எந்த கொள்கையும் ஏற்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் அருந்ததியர் சமுதாயத்துக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினார். அதனை திருமாவளவன் தான் கடுமையாக எதிர்த்தார். பட்டியல் சமுதாயத்திலேயே குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டும் தலைவராக இருந்து கொண்டு, குறுகிய சாதியவாதம் பேசும் திருமாவளவன், மற்ற கட்சிகளையோ, பாஜகவை பற்றி பேசலாமா?

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற திருமாவளவனின் கோரிக்கை நியாயமானது. ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக பங்கு கொடுத்திருக்கிறது. இதனால் திருமாவளவனின் கோரிக்கையை ஆதரிக்கிறேன். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஓணம் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து சொல்லியிருப்பது தவறு. பெரும்பான்மை சமுதாயத்தை விஜய் காயப்படுத்தி இருக்கிறார். மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்களின் குழந்தைகள் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் படிக்க கூடாது. இருமொழி பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.