ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும்: செல்வப்பெருந்தகை!

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது அவரது கட்சியின் கருத்து. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்த கொள்கை முடிவுகளாக இருந்தாலும் அதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் எடுக்கும் என்று செல்வபெருந்தகை தெரிவித்தார்

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் காங்கிரஸ் நிறுவன நாள் விழா, இணைய வழி மகளிர் உறுப்பினர் சேர்ப்பு மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மகளிர் காங்கிரஸ் நிறுவன நாள் விழாவை முன்னிட்டு இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாநில நிர்வாகிகள் மைதிலி தேவி, பூங்கொடி, கார்த்தீஸ்வரி, மாவட்ட தலைவிகள் லாவண்யா, கோமதி,பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதையடுத்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஷாபர், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, செய்தி வாசிப்பாளர் உமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு செல்வப்பெருந்தகை விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்து 41-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நாடு முழுவதும் ஆண்களுக்கு சரி நிகராக இருக்கின்ற பெண்கள் எல்லாவிதமான அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும். இதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, மிகப்பெரிய மாற்றத்தை உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டு வந்தார்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது அவரது கட்சியின் கருத்து. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எந்த கொள்கை முடிவுகளாக இருந்தாலும் அதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.