விஜய் ரசிகர்களின் உழைப்பு இறுதியில் சுரண்டப்பட்டு திமுகவிடம் தஞ்சம் அடையும்: அர்ஜுன் சம்பத்!

ஜோசப் விஜய்யின் ரசிகர்களின் உழைப்பு இறுதியில் சுரண்டப்பட்டு திமுக விடம் தஞ்சம் அடையும் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 7ஆம் தேதி உலகெங்கும் வசிக்கும் இந்து மக்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இந்தியா முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் விஜர்சனம் செய்யப்பட்டது. விழாவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி தேசிய தலைவர்களும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், பாஜகவினர் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான வாழ்த்துக்களை கூறினர். அதே நேரத்தில், விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என பாஜக பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது. பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் தற்போது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டி இருக்கிறது. இதே குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக திமுக மீதும் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வாழ்த்தியிருந்தார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வது ஏன்? என மீண்டும் பல இந்து அமைப்புகளும், நெட்டின்சகளும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழர்களின் முழுமுதற் கடவுள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் தமிழக வெற்றி கழகம் விஜய்க்கு, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

தமிழர்களின் முழுமுதற் கடவுள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் தமிழக வெற்றி கழகம் ஜோசப் விஜய் கடும் கண்டனம் திமுக மிரட்டலுக்கு இவரும் அடிபணிந்து வருகிறார் என்று தான் தோன்றுகிறது. விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்டது, ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காமலே போனார். கமலஹாசன் டிவி எல்லாம் உடைத்து ஊழலுக்கு எதிராக வருவேன் என்று சொல்லி பிறகு திமுகவிலே ஐக்கியம் ஆனார். தற்போது ஜோசப் விஜய் தமிழ் தேசிய சின்னங்களை கொடியில் வைத்து கொண்டு தமிழர்களின் பண்டிகை விநாயகர் சதுர்த்தி க்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்கிறார்.

ஜோசப் விஜய் மத்திய அரசை ஒன்றியம் என்றும் தன்னுடைய கொள்கைகள் முரண்பாடுகளாக இருக்கிறது. இருப்பினும் ஜோசப் விஜய் அரசியல் போக போக தான் தெரிய வரும். ஜோசப் விஜய் அரசியல் நிலைப்பாட்டை இந்து மக்கள் கட்சி- தமிழகம் கூர்மையாக கவனித்து வருகிறோம். ஜோசப் விஜய் திமுக விற்கு மாற்று அல்ல திமுகவின் ஊதுகுழல். திமுக – B teem. கமல் போல திமுக அதிருப்தி ஓட்டுக்களே ஜோசப் விஜய்க்கு பிரதானம். ஜோசப் விஜயின் ரசிகர்களின் உழைப்பு இறுதியில் சுரண்டப்பட்டு திமுக விடம் தஞ்சம் அடையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.