‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமே இல்லை: ப.சிதம்பரம்

“தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதைய ஆட்சிக் காலத்துக்குள் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்தும் என்ற செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், “‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமில்லை. அதற்கு குறைந்தபட்சம் ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ வைக்கும் அளவுக்கு மோடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கு அரசியலமைப்பு ரீதியில் தடைகள் அதிகம். எனவே, அது சாத்தியமில்லை. இண்டியா கூட்டணி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை முற்றிலும் எதிர்க்கிறது” என தெரிவித்தார்.

ஹரியானாவின் குருஷேத்ராவில் நேற்று (செப்.15) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இடஒதுக்கீட்டை நிறுத்த காங்கிரஸ் விரும்புவதாக குற்றம் சாட்டியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம், “இடஒதுக்கீட்டை ஏன் ஒழிக்க வேண்டும்? 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று நாங்கள்தான் சொல்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள்தான் கேட்கிறோம். மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். பிரதமர் கூறுகிறார் என்பதற்காக அவர் கூறும் அனைத்தையும் நம்பாதீர்கள்” என்று கூறினார்.

அக்டோபர் 5-ம் தேதி நடைபெறவுள்ள ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி அறிவிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம், “பொதுவாக தேர்தலுக்கு முன் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிப்பதில்லை. தேர்தல் நடந்து, எம்.எல்.ஏ.க்கள் கூடி, அவர்களின் விருப்பத் தேர்வுகள் கேட்பதுதான் நடைமுறை. அப்போது, ​​யார் முதல்வர் என்பதை, கட்சியின் உயர்மட்டக் குழு அறிவிக்கும். அதே நடைமுறை ஹரியானாவிலும் பின்பற்றப்படும் என நினைக்கிறேன்” என குறிப்பிட்டார்.

மேலும் அவர், “வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயம், மாநிலக் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஹரியானா சந்தித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு கோருகிறேன். காங்கிரஸ் கட்சி ஹரியானாவில் வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரும். விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு ஏற்றம் அளிக்கும் திட்டங்களை நிறைவேற்றும். வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்கும். இரட்டை என்ஜின் ஆட்சி என்று பா.ஜ.க. பெருமை கொள்கிறது. ஒரு இன்ஜின் எரிபொருள் இல்லாமல் உள்ளது; மற்றொன்று முற்றிலும் பழுதடைந்துள்ளது. இப்படிப்பட்ட இரட்டை எஞ்சின் ஆட்சியால் என்ன பயன்? இரண்டு இன்ஜின்களையும் குப்பையில் போடும் நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.