பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய போது தமிழக மீனவர் சுடப்படவில்லை: சீமான்!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களை அண்மையில் கைது செய்த இலங்கை கடற்படை வவுனியா சிறையில் அடைத்தது. இந்த மீனவர்களை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் போது மொட்டை அடித்து அனுப்பிய கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறது இலங்கை. இந்த அட்டூழியத்துக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீமான் கூறியதாவது:-

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டது இந்திய அரசுக்குதான் அவமானம். வல்லாதிக்க நாடு என்கிற இந்தியாவை மதிக்காமல் இலங்கை நடந்து கொள்கிறது. இதையே மலையாளிக்கோ, கன்னடனுக்கோ குஜராத்திக்கோ இலங்கை அரசு செய்திருந்தால் கொதித்திருக்கமாட்டார்களா? கேட்பதற்கு நாதி இல்லாதவன் என்பதாலேயே தமிழனுக்கு இத்தகைய கொடூரம் நிகழ்த்தப்படுகிறது. நான் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கும் போது என் மீனவன் மீது கை வைத்துவிடுவார்களா? அப்படி கை வைத்துவிட்டால் நான் உடனே பதவி விலகிவிடுவேன். பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய போது ஒரு தமிழக மீனவனாவது சுட்டுக் கொல்லப்பட்டானா? இல்லையே.. தமிழ்நாட்டு குடிகளையும் காப்பாற்றிய காவல்தெய்வம் பிரபாகரன். அவரது பிள்ளைகள் நாங்கள். இவ்வாறு அவர் கூறினார்.