பயிற்சி மருத்துவர்களுடன் நேற்று (செப்டம்பர் 16) பேச்சுவார்த்தை நடத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய முடிவுகளை அறிவித்தார். பயிற்சி மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் நீக்கப்படுவார், மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்படுவார்கள் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பலாத்காரம் செய்ய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் உறுதியாக உள்ளனர்.
போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. கடந்த 14 ஆம் தேதி, மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். உங்களுக்கு எதிராக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டேன் என்று கனிவோடு பேசினார் மம்தா. இதையடுத்து போராடி வரும் மருத்துவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது இல்லத்துக்கு முன்பாகச் சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை மம்தா ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர். என்னை சந்திக்க விருப்பம் இல்லாவிட்டாலும் உள்ளே வந்து ஒரு கப் டீயாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார் மம்தா பானர்ஜி. ஆனால், பயிற்சி மருத்துவர்கள் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில் 5வது முறையாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜூனியர் டாக்டர்கள் சம்மதித்தனர். இதையடுத்து நேற்று (செப்டம்பர் 16) இரவு ஒருவழியாக பேச்சுவார்த்தை நடந்தது. காளிகட்டில் உள்ள மம்தா வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் 30 பேர் கொண்ட குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். பேச்சுவார்த்தையில், பயிற்சி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டுமென மம்தா வலியுறுத்தினார். பயிற்சி மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு உயர் மருத்துவ அதிகாரிகளையும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல் ஐ.பி.எஸ்ஸையும் நீக்குவதாக அறிவித்தார். வினீத் கோயல் ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், நாளை (செப்டம்பர் 17) மாலை அவர் ராஜினாமா செய்வார் என்றும் மம்தா கூறியுள்ளார்.
கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல், கொல்கத்தா வடக்கு துணை ஆணையர் அபிஷேக் குப்தா மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் டெபாசிஸ் ஹல்தார் மற்றும் சுகாதாரப் பணிகள் இயக்குநர் கவுஸ்தாவ் நாயக் ஆகிய இரண்டு மூத்த சுகாதார அதிகாரிகள் நீக்கப்படுவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். “ஜூனியர் டாக்டர்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா போலீஸ் கமிஷனரை மாற்ற முடிவு செய்துள்ளோம்.. அவர் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். சுகாதாரத் துறையில், 3 பேரை நீக்கக் கோரினர். நாங்கள் 2 பேரின் நீக்கத்துக்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் 99% கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். நாங்கள் வேறு என்ன செய்ய முடியும், சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மீண்டும் பணிக்கு வருமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.