விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் நான் பங்கேற்பதாக பரவும் தகவல் பொய்: சி.வி.சண்முகம்!

“கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக, சார்பில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில், அதிமுக, சார்பில் நான் கலந்துகொண்டு பேசப்போவதாக ஒரு போலியான, தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்தில் ஏடிஎஸ்பி தினகரனிடம் முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம் எம்பி இன்று மாலை புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக, சார்பில் நடைபெற உள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அதிமுக, சார்பில் நான் கலந்துகொண்டு பேசப்போவதாகவும், அது குறித்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ, டிவியில் செய்தி வெளியானதாகவும், ஒரு போலியான, தவறான தகவல்கள் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க பொய் தகவல். திட்டமிட்ட எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்படும் பொய் செய்தியாகும். நியூஸ் ஜெ தொலைக்காட்சியும், அது பொய் தகவல் என மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், சமூக வலை தளங்களில் பரப்பப்படும் குற்றங்கள் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளேன்.

இது முதல்முறை அவதூறு தகவல் இல்லை. கடந்த லோக்சபா தேர்தல், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நேரத்திலும் அவதூறு பரப்பினர். இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். ஒரு புகார் மீதும் நடவடிக்கையில்லை. என் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்வதில் காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார்மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.