ரூ.28 கோடி லஞ்சம்: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு!

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

2011-16 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ஆர்.வைத்திலிங்கம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

2011 முதல் 2016 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தற்போது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். சென்னை பெருங்களத்தூரில் 2016-ல் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட அனுமதி கோரியபோது, அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதில், லஞ்சப் பணம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டதுபோல கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த பணத்தில் பல இடங்களில் சொத்துகளை வாங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் மழைநீர் வடிகால், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அண்மையில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.