உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்த விசிக துணைப் பொதுச் செயலாளர் மீது, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், அமைச்சர் உதயநிதியைக் குறி வைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா’ என்ற கருத்து திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் குறித்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், நீலகிரி தொகுதி எம்பியும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியதாவது:-
மதவாதத்தை ஒழித்து, சமூக நீதியை காப்பதில் திமுகவுடன் தோள் கொடுக்கும் அரசியல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் உள்ளனர். இடதுசாரி சிந்தனையில் இருந்து, சிறிதும் வலுவாமல் திருமாவளவன் உள்ளார். இந்தச் சூழலில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை, அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர், கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. விசிக இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். விடுதலைச் சிறுத்தைகளும் இதனை ஏற்க மாட்டார்கள்.
கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று. இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாக வராது. இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பாஜகவிற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.