இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவ.14-ம் தேதி தேர்தல்!

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். நவ.14-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த செப்.21-ம் தேதி நடந்த 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். அதிபராக பதவியேற்றக் கொண்ட அநுர குமார திசாநாயக்க, நேற்று முன்தினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரியவை இடைக்காலப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். இலங்கையின் 16-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஹரிணி அமரசூரியவுக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், சுகாதாரம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் ஆகிய 3 பேர் அடங்கிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

இந்நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற பதவிக் காலம் முடிய 10 மாதங்கள் இருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தை கலைத்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நவ.14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேட்புமனு தாக்கல் அக்.4 முதல் அக்.11-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றம் நவ.21-ம் தேதி கூடும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அநுர குமார திசாநாயக்க, முந்தைய இலங்கை அரசாங்கங்களின் ஊழல், வீண் விரயம், மோசடி முறைகேடுகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் உள்ளிட்ட 23 உடனடி மாற்றங்களை அமல்படுத்துவேன் என அறிவித்திருந்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள இடங்களான 225-ல் பெரும்பான்மையை நிருபிக்க 113 இடங்கள் தேவை. தேசிய மக்கள் சக்திக்கு 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெருன்பான்மை பலம் வேண்டும். தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கக் கூடிய வேறெந்த கட்சியும் நாடாளுமன்றத்தில் கிடையாது. இதனால், புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் உள்ளதால் அதிபர் அநுர குமார திசாநாயக்க, தனது அறிவிப்புகளை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சித் தலைவரான சஜித பிரேமதாச, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்படப்போவதில்லை என அறிவித்துள்ளார். அதுபோல முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கக்கூடிய கூட்டணியில் இணையப் போவதில்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.