கேரளாவில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

கேரளாவில் மற்றொருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேரள மாநில சுகாதாரத் துறை, இந்நோய் தொடர்பான அறிகுறியுள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து மாநிலத்துக்கு புதிதாக வரும் அனைவரும் மாநில சுகாதார நிறுவனத்தை அணுக வேண்டும் என்றும், நோய் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்துதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, குரங்கு அம்மை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதாரத் துறை செப்.23-ம் தேதி வெளியிட்டது. முன்னதாக, கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மாலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்திருந்த நிலையில் அவர் clade 1b வகை குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. clade 1b வகை குரங்கு அம்மை தொற்று பதிவாகி உள்ள ஆப்பிரிக்க கண்டத்தைச் சாராத 3-வது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 2002-ல் ஏற்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு clade 2 வகையைச் சார்ந்தது. அப்போது, முதல் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. தற்போது வெளிப்பட்டிருப்பது clade 1 வகை குரங்கு அம்மை.

குரங்கம்மை நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். மருத்துவ மேலாண்மை மற்றும் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டவர் குணம்பெறுவர். இந்நோய் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீண்ட மற்றும் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதன் மூலம் பரவுகிறது. பொதுவாக குரங்கு அம்மை நோய்பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சொறி, மற்றும் நிணநீர் கணுக்கள் வீக்கம் போன்றவை பொதுவான அறிகுறிகள். மேலும் இது பல்வேறு மருத்துச் சிக்கலுக்கும் வழிவகுக்கிறது.

இதனிடையே, குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.