ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!

சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் மூலமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்ந்து இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தனிப்படை அதிகாரிகள் சென்னை துறைமுகத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது, அங்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவிருந்த ஒரு சரக்குப் பெட்டகத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். சரக்கு கப்பலில் இருந்த ஒவ்வொரு பார்சலையும் கீழே இறக்கி பார்த்தனர். அப்போது, அந்தப் பெட்டகத்தில் 450 மூட்டைகள் இருந்துள்ளன. அதனை சோதனை செய்தபோது அந்த மூட்டைகளில் தலா 50 கிலோ எடைக் கொண்ட படிகக் கற்களின் பவுடர்கள் இருந்துள்ளன. அதற்கடியில் சோதனை செய்து பார்த்தபோது 37 பாக்கெட்களில் தலா 3 கிலோ சூடோ எபிஃட்ரின் என்ற போதைப் பொருள்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப் பொருளின் மதிப்பு சந்தை மதிப்பில் சுமார் 110 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, போதைப் பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பார்சல் எந்த பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த இருவரின் பெயரில் இந்த பார்சல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக ஷிப்பிங் ஏஜென்ட்களான அபுதாஹீர் மற்றும் அகமது பாட்ஷாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஷிப்பிங்கில் ஏஜென்டாக பணியாற்றி வந்ததும், தொலைபேசி அழைப்பின் மூலமாக இந்த பார்சல்களை தங்களுடைய பெயரில் பதிவு செய்து ஆஸ்திரேயாவுக்கு அனுப்பியதாகவும், இந்த பார்சல்களில் போதைப் பொருள்கள் இருப்பது குறித்து தங்களுக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியதாக 2 சொகுசு கார்கள் மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல நான்கு முறை ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள்களை கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, போதைப் பொருள் சென்னைக்கு எங்கிருந்து வந்தது என்றும், போதைப் பொருள் கடத்தலுக்கு பின்னணியில் உள்ள கும்பல் யார், ஆஸ்திரேலியாவில் இருந்து தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருள் உற்பத்திக்கு தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சூடோ எபிட்ரின் என்ற போதைப் பொருள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.