“டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளது” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
இந்த சந்திப்பு இனிய சந்திப்பாக இருந்தது. பிரதமரும் எங்களிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன். கோரிக்கைகளின் சாராம்சங்களை தெளிவாக எழுதி ஒப்படைத்துள்ளோம்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தியது போல், 2-ம் கட்ட பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. இந்த 2-ம் கட்டப்பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள 2019-ம் ஆண்டு மாநில அரசின் நிதி, கடன் பெற்றும் பணிகள் தொடங்கி, மத்திய அரசுடன் இணைந்த திட்டமாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இதை ஏற்று, 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சரும் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார். தொடர்ந்து, மத்திய அரசின் திட்ட முதலீட்டு வாரியமும் ஒப்புதலை அதே ஆண்டு வழங்கியது. இந்த பணிகளுக்கு இதுவரை ரூ.18,564 கோடி செலவழிக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், மத்திய அரசின் நிதியும் வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி நிதியை உடனே வழங்க கேட்டுள்ளேன்.
அடுத்ததாக, மத்திய அரசு 60 சதவீதம், தமிழக அரசு 40 சதவீதம் நிதியில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு, இந்தாண்டு மத்திய அரசு வழங்க வேண்டியது ரூ.2,152 கோடி. இதில், முதல் தவணை இதுவரை தமிழகத்துக்கு விடுவிக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாதது தான் காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
காலை உணவுத்திட்டம் போன்ற மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாத பல முன்னோடி திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையான, மும்மொழிக் கல்விக் கொள்கையை பின்பற்ற தமிழக அரசு ஒப்புக் கொள்ளவில்லை. எந்த ஒரு மாநிலத்திலும் மொழி திணிப்பு இருக்காது என்று தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்த திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த சரத்து இல்லை.
எனவே, ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கூறிவருகிறோம். இந்த சூழலில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படாததை காரணம் காட்டி மத்திய அரசு நிதியை விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளோம். உடனடியாக இத்திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
மூன்றாவதாக, தமிழக மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீனவர்கள், மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படைய சிறைபிடித்து துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பலமுறை வலியுறுத்தி கடிதம் எழுதியும், இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 191 மீன்பிடி படகுகள் 145 மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அடுத்த மாதம் கொழும்புவில் இந்தியா- இலங்கை இடையில் நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து உடனடியாக தீர்வு காண வலியுறுத்தியுள்ளோம். இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளது. புதிய அதிபரிடம் இந்த கோரிக்கையை மத்திய அரசு வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
இந்த 3 முக்கிய கோரிக்கைகளையும் கவனமாக கேட்ட பிரதமர், இதுகுறித்து, கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நலன் காக்க தேவையான இந்த 3 கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். தமிழகத்துக்கு ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. அவற்றை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்த 3 கோரிக்கைகள் தொடர்பாகத்தான் 45 நிமிட சந்திப்பில் பேசப்பட்டது. எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.