போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல்: டி.டி.வி. தினகரன்!

தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கால் சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான கொடிய வகை போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே நான்குமுறை ஆஸ்திரேலியாவிற்கு போதைப்பொருள் கடத்தியிருப்பதும், இந்த கடத்தலுக்கும் சர்வதேச கும்பலுக்கும் தொடர்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதை ஊசி, மாத்திரை, சாக்லேட் என பல்வேறு வடிவங்களில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை பல முறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கால் சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்துவதோடு, இதுபோன்று கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.