சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பக்கம் நாங்கள் நிற்கிறோம். அவருக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டால் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். தலித் சமூக மக்களுக்கான நிதி குறித்து பிரதமர் மோடி அரியானா தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார். இதற்கு நான் தேர்தல் பிரசாரத்தில் பதிலளிக்கிறேன். கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் ராஜினாமா செய்தாரா?.
உள்துறை மந்திரியாக உள்ள அமித்ஷா மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. யாரையும் தனிப்பட்ட முறையில் இலக்காக கொண்டு செயல்படக்கூடாது. சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் கட்சியின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம் .
காங்கிரசின் அடிப்படை வாக்கு வங்கியை சீர்குலைக்க பா.ஜனதாவினர் இதை செய்கிறார்கள். சட்டம் தனது கடமையை செய்கிறது. எந்த தவறும் நடைபெறாத போதும் எதிர்க்கட்சிகள் மூடா விவகாரத்தை பெரிதாக்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.