பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இயற்கை விவசாயத்தில் இளம் தலைமுறையினருக்கு முன்னோடியாக இவர் இருந்திருக்கிறார். விவசாயத்தில் இவரது பங்களிப்புக்காக, கடந்த 2021ம் ஆண்டு பாப்பம்மாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில்
பாப்பம்மாள் பாட்டி மறைவு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “பாப்பம்மாள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் அவர் முத்திரை பதித்துள்ளார். பாப்பம்மாளின் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை போற்றினர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-
கழக முன்னோடியும் – கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர். 1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள் அவர்கள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.
1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார். தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள் அவர்கள். பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!” என்று அவரை வாழ்த்தினேன். கழக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்” என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.
அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி கூறியுள்ளதாவது:-
கழகம் தொடங்கிய காலத்திலேயே உறுப்பினராகி, கழக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவில், பெரியார் விருது பெற்ற கோவை தேக்கம்பட்டியைச் சேர்ந்த கழக மூத்த முன்னோடி பாப்பம்மாள் பாட்டி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றோம். கழகத்தின் 15 மாநில மாநாடுகளில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி அனைத்து போராட்டங்களிலும் களம் கண்டவர். நீட் விலக்கை வலியுறுத்தி கடந்தாண்டு நம் இளைஞரணி நடத்திய கையெழுத்து இயக்கம் வரை கொள்கை உறுதியோடு களத்தில் நின்ற பாப்பம்மாள் பாட்டியின் அர்ப்பணிப்பு, போற்றுதலுக்குரியது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் – நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-
வேளாண் துறையில் முன்னோடியாக விளங்கிய, மதிப்புக்குரிய பாப்பம்மாள் பாட்டி அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாப்பம்மாள் பாட்டி அவர்கள் ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தமது 108 வயது வரை தொடர்ந்து விவசாயப் பணிகள் மேற்கொண்ட பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு, பத்மஶ்ரீ விருது அளித்துப் பெருமைப்படுத்தியதோடு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆசியும் பெற்றது குறிப்பிடத்தக்கது. பாப்பம்மாள் பாட்டி அவர்களின் வாழ்க்கை, இளைய தலைமுறையினருக்கு பெரும் எடுத்துக்காட்டாகும். அவரது புகழ் தொடர்ந்து நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 110 வயதான பாப்பம்மாள் பாட்டி கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியுள்ளார். இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே காலில் விழுந்து வணங்கியது அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும். பாப்பம்மாள் பாட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.