அதிமுக ஆட்சியில் சீட்டிங், பிராடு என செந்தில் பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின் தற்போது தியாகி எனக் கூறுவது ஏன் என விமர்சித்திருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 450 நாள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை வரவேற்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜியை சீட்டிங், பிராடு என விமர்சித்த முதலமைச்சர் தற்போது தியாகி என கூறுவது ஏன்? என கேள்வி எழுப்பி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ராயபுரம் கொருக்குப்பேட்டை பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயக்குமார் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-
மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அதே குடும்பத்திடம் 15000 டாஸ்மாக் மூலம் தமிழ்நாடு அரசு வசூலிக்கிறது. அண்ணாவின் மக்கள் திட்டங்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு அதற்கான விலையை கண்டிப்பாக கொடுக்கும். தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக. 37 ஆண்டுகள் ஆட்சி கட்டிலை அதிமுக அலங்கரித்து இருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் கருணாநிதி புகழ் பாடுகின்றனர். அதற்கே நேரம் போதாத நிலையில் மக்கள் பணிகளை கவனிக்கவில்லை. தமிழகத்தில் அண்ணாவின் கொள்கைகளுக்காகவும் அண்ணாவின் மக்கள் நல சிந்தனைக்களுக்காகவும் அதிமுக செயல்படுத்திய திட்டங்களுக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.
தற்போது ஒருவர் சிறையில் இருந்து வந்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜியை கடத்தல் செய்பவர், ஆள் கடத்தல் செய்பவர், செந்தில் பாலாஜி சீட்டிங், ஃபிராடு என தற்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விமர்சித்தார். தற்போது அவர் சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் நிலையில் அவரை தியாகி என கூறுவது எவ்வளவு வெட்கக்கேடானது என்பதை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். சாராய வருமானத்தை மட்டுமே திமுக அரசு குறியாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போன முத்துச்சாமி தமிழக மக்களிடம் சாராயம் விற்று வருகிறார். 3000 மனமகிழ் மன்றங்களுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. வேலைக்கு செல்லும் ஆண்களிடம் டாஸ்மாக் மூலம் வசூல் செய்து அதனை மக்களுக்கு கொடுக்கின்றனர். 15,000 ரூபாயை ஒரு குடும்பத்திலிருந்து பெற்றுக் கொண்டு அதே குடும்பத்திற்கு ஒரு பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.