தன்னுடைய அமைச்சர் சபையிலேயே மூன்றில் ஒரு பங்கு ஊழல் அமைச்சர்களை வைத்துக் கொண்டு ஸ்டாலின் நேர்மையான அரசியலைத் தருகிறேன் என்று எப்படி கூற முடியும் என்று கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சியினரோடு சேர்ந்து பார்த்தார். இந்நிகழ்ச்சியின்போது கட்சியின் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சாதாரண பெண்கள் கூட இன்று பாஜகவில் இணைந்து வருகின்றனர். அமைதியான ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் பாஜக கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜக ஜனநாயக ரீதியான கட்சி. எங்களுடைய தேசியத் தலைவர்கள் கூட ஒருமுறை அல்லது இரண்டு முறைதான் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும். எங்கள் கட்சியில் ஒரு குறிப்பிட்ட காலம் என்பதும், கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் கூட உயர்ந்த பொறுப்பிற்கு வர முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சாதாரண உறுப்பினராக இருந்து மத்திய அமைச்சராவதற்கும், மாநிலங்களில் முதல்வராவதற்கும் வாய்ப்பிருக்கும் ஒரே கட்சி இந்தியாவிலேயே பாஜக கட்சிதான்.
இன்று மாலை முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வந்துள்ளது. மேலும், 400 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக திமுகவுக்கு தியாகியாக சிறையில் இருந்து, எப்படியெல்லாம் வேலை வாங்கிக் கொடுப்பதற்காக பணம் வாங்கினோம். புகார் கொடுத்தவுடன் அதனை திருப்பிக் கொடுத்து விட்டோம் என்று கூறிய முன்னாள் மந்திரி மீண்டும் அமைச்சராகி இருக்கிறார். திமுக 2021 இல் ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட மாடல் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். சமூக நீதி, சமத்துவம், பெரியாரிய சிந்தனை என்று பல்வேறு விளக்கம் கூறுகின்றனர். ஆனால், திராவிட மாடல் என்றால் எங்களைப் பொறுத்தவரை குடும்ப அரசியல், வாரிசு அரசியல், ஊழல் அரசியல், ஊழலுக்குத் துணை போகின்ற அரசியல். தன்னுடைய அமைச்சர் சபையிலேயே மூன்றில் ஒரு பங்கு ஊழல் அமைச்சர்களை வைத்துக் கொண்டு ஸ்டாலின் நேர்மையான அரசியலைத் தருகிறேன் என்று எப்படி கூற முடியும்.
திமுக ஒரு காலத்தில் ஜனநாயக ரீதியான கட்சியாக இருந்தது. ஜனநாயகத்தைப் போற்றி பாதுகாக்கின்ற ஒரு கட்சியாக அது ஆரம்பிக்கப்பட்டது. எளிய மனிதர்கள்கூட அந்தக் கட்சியிலேயே உயர்ந்த பதவிக்கு வருவதையெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்னரே சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. ஆனால், திமுகவில் தற்போது 50, 60 ஆண்டுகளுக்கு மேல் உழைத்தவர்கள் எல்லாம் எங்கோ ஒரு மூளையில் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். திமுகவின் வாரிசு அரசியலையே இது காட்டுகிறது. திமுகவில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்கிற நிலைமையை திமுக எடுத்துக்காட்டி உள்ளது. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக அந்தக் குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கு வந்து கொண்டிருப்பதுதான் திராவிட மாடலா.
அமைச்சரவையில் பட்டியலின மக்களின் சார்பில் எந்த பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கப்படவில்லை. திமுகவின் இந்த வாரிசு அரசியல் குறித்து பாஜக தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டப் பேரவை தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.