துணை முதல்வர் பதவிக்கு இப்போ என்ன அவசியம்?: கோகுல இந்திரா!

துணை முதல்வர் பதவிக்கு இப்போது என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சர்களாக, செந்தில் பாலாஜி, நாசர் மற்றும் கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாட்டுத்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளனர்.

இந்நிலையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முதல்வர் ஸ்டலின் சரியாக செயல்படவில்லையா? அல்லது சரியாக செயல்பட முடியவில்லையா? இப்போது துணை முதல்வர் பதவிக்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவுடன் திமுக மிக நெருக்கமாக உள்ளது என்பதை இந்த அமைச்சரவை மாற்றம் காட்டுகிறது என்றும் கோகுல இந்திரா கூறியுள்ளார். சீனியர் அமைச்சர்கள் பலர் இருக்கும் போது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டிய காரணம் என்ன என்றும் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது என்றும் கோகுல இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியை பதவி இறக்கம் செய்தது போல், வனத்துறை இலக்கா ஒதுக்கப்பட்டிருப்பதும் கண்டனத்திற்குரியது என்றும் கோகுல் இந்திரா தெரிவித்துள்ளார்.