உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி உள்ள நிலையில், திமுகவில் வாரிசு அரசியல் நிலவுவதாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. “விடியல்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு விடியல், அவர்களின் குடும்பத்திற்கு விடியல் எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், பாஜக இந்த செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளது. அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தால் அவர்கள் இறுதி வரை தொண்டர்களாக மட்டுமே இருக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமே உதயநிதி ஸ்டாலினின் இந்த பதவி உயர்வு காட்டுகிறது என தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்துள்ளனர். கோபாலபுரத்தின் வாரிசாக இருப்பது ஒன்றே திமுக கட்சியில் தலைமைக்கு வரவும், ஆட்சி செய்யவும் ஒரே தகுதி. பரம்பரை பரம்பரையாக கட்சிக்கு உழைத்த தொண்டர்களுக்கு சிறை தண்டனையும் வழக்குகளும், ஆனால் அரசியல் அனுபவமற்ற கோபாலபுர வாரிசுகளுக்கு பதவியும் அதிகாரமும் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகி உள்ளதை விமர்சித்துள்ளார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, எக்ஸ் தளத்தில், திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதை விமர்சிக்கும் வகையில் இரு கேலிச்சித்திரத்தை பதிவிட்டு விமர்சித்துள்ளார். அதில் கருணாநிதி குடும்பம் தொடங்கி, ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, பொன்முடி வரை பலரையும் குறிப்பிட்டுள்ளனர்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “சலுகை பெற்ற சிலருக்கு மட்டுமே சூரியன் பிரகாசிக்கிறது. கடந்த 40 மாதங்களாக தமிழ்நாட்டின் மற்ற அனைவருக்கும் கிரகணம் தான். “விடியல்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு விடியல், அவர்களின் குடும்பத்திற்கு விடியல் மற்றும் அந்த தலைவர்களுக்கான விடியல்” எனத் தெரிவித்துள்ளார்.