முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்நிலையில் போராட்ட அறிவிப்பு செய்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணை பலப்படுத்திய பின் அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தலாம் என மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 27.02.2006 அன்று ஆணையிட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 17.06.2021-இல் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து கேரள அரசு ஒத்துழைக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நானும் மாண்புமிகு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து 06.07.2021 அன்று அளித்த கோரிக்கை மனுவில், அணையை பலப்படுத்த கேரள அரசிற்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தலைமைச் செயலாளர், மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத் துறை அவர்களும் சம்மந்தப்பட்ட கேரள அரசின் அதிகாரிகளுடன் தொடர்ந்து, இது குறித்து கடிதம் மற்றும் பல வழக்குகளின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளனர். இதற்கிடையே, தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் (IA. 28 of 2017) இது தொடர்பாக ஒரு கூடுதல் மனுவை தமிழ்நாடு அரசு 27.11.2021 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், 14.11.2022 மற்றும் 07.08.2023 தேதிகளில் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்துள்ளது.
03.03.2022 அன்று நான் கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பேபி அணை அருகே உள்ள மரங்களை அகற்ற விரைவில் அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழுவின் அறிவுரையின்படி 12.12.2022 மற்றும் 05.05.2023 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரு மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்திலும் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. 05.05.2023 அன்று நடந்த கூட்டத்தை தொடர்ந்து, கேரள அரசு வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணை வனச்சாலையை சரிசெய்வதற்கு ரூபாய் 31.24 இலட்சத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 04.10.2023 அன்று தமிழ்நாடு அரசு, கேரள அரசிற்கு இத்தொகையை செலுத்தியது. தரைப்பாலம் சீரமைக்கும் பணி 09.02.2024 அன்று தொடங்கப்பட்டு 09.05.2024 அன்று முடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு, கேரள அரசுக்கு கடிதங்களின் வாயிலாகவும், மேற்பார்வை குழு கூட்டங்களின் வாயிலாகவும், பேபி அணையின் எஞ்சிய பணிகளை முடிக்க தேவையான அனுமதி அளிக்க வலியுறுத்தி வருகிறது. மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதன் மூலம், தமிழ்நாட்டின் உரிமை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பாசன விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளுக்காக எப்போதும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. அண்டை மாநில நதி நீர் பிரச்சினையில் அரசியல் இலாபம் கருதி வெற்று அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கும் அ.இ.அ.தி.மு.க.. மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.