மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு மத்திய அரசு 50% நிதி பங்களிப்பு வழங்க வேண்டும்: அண்ணாமலை!

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு மத்திய அரசு 50 சதவீத நிதி பங்களிப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அண்ணாமலை நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் நம்நாடு உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ளது. உங்கள் தலைமையிலான மத்திய அரசு, மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நாட்டின் முக்கிய நகரங்களில் மக்களின் பொது போக்குவரத்தை மேம்படுத்தி உள்ளது.

சென்னையின் பொது போக்குவரத்தில் மகத்தான சாத்தியக்கூறுகளை கொண்ட மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டத்துக்கு, 2020-ம்ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். ஆனாலும், மத்திய அரசின் நிதி ஒப்புதலுக்கு முன்பாக, நிதி பங்கீடா அல்லது மானியமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பாக இந்த திட்டத்தை தமிழக அரசு மாநில அரசின் திட்டமாக தொடங்க முடிவு செய்தது. ரூ.63,246 கோடியிலான இந்த திட்டம், நிதிப்பற்றாக்குறையால் தற்போது முடங்கிக் கிடைக்கிறது. நிதிப்பற்றாக்குறை காரணமாக தமிழக அரசால் மேற்கொண்டு கடன் பெற முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு முதலீடுகளையும், திட்டங்களையும் வழங்கியுள்ளது. இருப்பினும், இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, மத்திய அரசை தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது.

திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மூன்றில் ஒரு பங்கு நிதி திட்டம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் நகரின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தை இணைக்கிறது. இந்ததிட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். மத்திய அரசின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்பது தெளிவாகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக பொய் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு காரணமாக தமிழகத்துக்கு பல்வேறு பலன்கள் கிடைத்துள்ளன. பல முறை பிரதமர் தமிழகத்துக்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். உங்களின் ஆதரவுக்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம். தொடர்ந்து உங்கள் உதவியை எதிர்பார்க்கிறோம். தற்போது, மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கருத்தில்கொண்டு, சென்னைமெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு 50 சதவீத நிதி பங்களிப்பு வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.