பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சனம் செய்யுங்கள்: ஆர்.எஸ்.பாரதி!

“மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டுப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தப்பித்து கொள்ளக் கமலாலயத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் எல்லாம் செந்தில் பாலாஜி வழக்கை எதிர்கொள்ளும் திமுகவை தூற்ற கொஞ்சமும் அருகதை இல்லாதவர்கள்” என்று, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

‘செந்தில் பாலாஜி தியாகி என்றால் ஏமாந்தவர்கள் துரோகிகளா? நீதிபதியாக இருக்க வேண்டிய முதல்வர் செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது’ என அறிக்கை விட்டிருக்கிறார், பாமக நிறுவனர் ராமதாஸ். தைலாபுரம் அரசியல் பயிலரங்கத்தில் பாட்டாளிகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ராமதாஸ், அரசியல் அறியாமல் அரைவேக்காடாய் அறிக்கை விட்டிருக்கிறார். செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு விவரத்தை அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

செந்தில் பாலாஜி மீது 2015, 2017 மற்றும் 2018-ல் மூன்று வழக்குகள் பதியப்பட்டன. 2015-ல் பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்துப் பேசினார். ஆனால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த போது, தான் குற்றமற்றவன். தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னார்.

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் குழு, ஆட்சியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்ததால்தான், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு அவர் மீது வழக்குகளும் புனையப்பட்டன. இந்த உண்மைகள் ராமதாஸுக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமி அரசைக் காப்பாற்றிக் கொள்ள, செந்தில் பாலாஜி மீது வழக்குப் போட்டார். ராமதாஸ் தன் இருப்பை காட்டிக் கொள்ள அறிக்கை விட்டிருக்கிறார்.

தேவசகாயம் என்பவரின் புகாரின் மீது 29/10/2015 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் அவர் குற்றவாளியாகவும் சேர்க்கப்படவில்லை. கோபி அளித்த புகாரின் பேரில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 20.06.2017-ல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் 12 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் செந்தில் பாலாஜி குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை.

மீண்டும் அருண் குமார் என்பவர் 2019-ல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் பேரில் மேல் புலன் விசாரணை செய்யப்பட்டு, செந்தில் பாலாஜியையும் குற்றவாளியாகச் சேர்த்து 08/03/2021 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி 06.09.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த காரணத்தினாலேயே, இந்த வழக்குகள் அவர் மீது பொய்யாகச் சுமத்தப்பட்டன என்பது தெளிவாகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர இசைவானைக் கேட்டு வந்த கோப்பில், எந்த தாமதமும் இல்லாமல் முதல்வர், ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற நிலையில் கோப்புகளில் உள்ள அம்சங்களை மட்டுமே கவனித்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து கடமையாற்றியது எல்லாம் ராமதாஸுக்குப் புரியவில்லையா? இல்லை புரியாமல் நடிக்கிறாரா?

செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டு சிறை செல்லவில்லைதான். ஆனால், பொய் வழக்குகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கில், மத்திய அரசின் எதேச்சாதிகார போக்கால் அவரை கைது செய்து, அழுத்தம் தந்து துன்புறுத்தி வாக்குமூலம் பெற்று, திமுகவின் மீது மேலும் பொய் வழக்குகள் போடலாம் என்ற கனவை அவர் பொய்யாக்கினார். அதற்காக 471 நாட்கள் சிறையில் இருந்தார்.

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, “அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம், ‘ஏன் நீங்கள் பாஜகவில் சேரக்கூடாது?’ என கேட்டனர்,” என்ற அதிர்ச்சி தகவலைச் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சொன்னார். பாஜகவில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராகக் களமாட நினைத்தார்கள். அதற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது நல்லெண்ணம் கொண்டோருக்கு மட்டுமே புரியும். பாஜக நிழலில் இருக்கும் தைலாபுரத்தில் இருப்பவர்களுக்கு எத்தனை விளக்கவுரை, பொழிப்புரை அளித்தாலும் புரியாது.

1989 ஜூலை 16-ம் தேதி நினைவிருக்கிறதா? அன்றுதான் ராமதாஸ் 5 சத்தியங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான், ‘என் வாரிசுகள் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார்கள்’ என்றார். இப்போது அன்புமணி கட்சியின் கடைக்கோடி உறுப்பினரா? ‘சத்தியம் தவறாத உத்தமர் போல’ நடிக்கும் ராமதாஸ் எதற்கெடுத்தாலும் அறிக்கைவிடுவார். ஏன் அமலாக்கத் துறையின் அடாவடிகளைக் கண்டித்து அறிக்கை விடத் தயங்குகிறார்? அமலாக்கத்துறையை பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் துறையாக மோடி அரசு ஏவிக் கொண்டிருக்கும் சூழலில் ஆட்சியில் இருந்து கொண்டே அதனைத் தீரத்தோடு எதிர்த்து களமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. ஆனால், எதிர்க் கட்சியாக இருக்கும் பாமக அமலாக்கத்துறையின் அத்துமீறல்களை ஏன் எதிர்க்கவில்லை? அதற்குப் பின்னால் இருக்கும் நுண்ணரசியல் என்ன?

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையில் பத்தாண்டுகளாக பாஜக கூட்டணியே கதியென்று பாமக ஏன் பம்மிக் கிடக்கிறது? மத்திய அமைச்சராக இருந்த போது, அன்புமணி ராமதாஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ தொடர்ந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாகக் கடந்த 2015-ம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டுப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தப்பித்து கொள்ளக் கமலாலயத்தின் தஞ்சம் அடைந்தவர்கள் எல்லாம் செந்தில் பாலாஜி வழக்கை எதிர் கொள்ளும் திமுகவைத் தூற்ற கொஞ்சமும் அருகதை இல்லாதவர்கள். மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு ஏன் வரவில்லை? ஏன் அமலாக்கத் துறை அடக்கி வாசிக்கிறது? தைலாபுரம் ஏன் அமலாக்கத் துறையை எதிர்க்கவில்லை? என்பதில் புதைந்திருக்கிறது அரசியல். மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய அன்புமணி ராமதாஸுக்கு ஏன் தொடர்ச்சியாக ராஜ்ய சபா சீட் தரப்படுகிறது? பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?

2016 சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி செய்த ஊழல்களை மு.க.ஸ்டாலின் முன்வைத்தாரே எனச் சொல்லும் ராமதாஸ் , ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டிய போது என்ன சொன்னார் என்பது மறந்துவிட்டதா? ‘சொத்துக் குவிப்பு வழக்கு குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடமா? அது ஊழலின் சின்னமாகவே பார்க்கப்படும்’ எனக் காட்டமாக அறிக்கைவிட்டுவிட்டு, அந்த நினைவிடம் கட்டிய எடப்பாடி பழனிசாமியிடமே தேர்தல் கூட்டணி வைத்தாரே?

“ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது” என முன்பு ராமதாஸ் சொன்னார். அந்த பினாமிகளோடுதான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ராமதாஸ் கூட்டணி வைத்தார். பாமக-வின் பாவங்களை கழுவிவிட்டு, ராமதாஸ் திமுகவை விமர்சிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.