நெருக்கடிகளால் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்த இயலவில்லை: திருமாவளவன்!

‘விசிகவுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளால் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்த இயலவில்லை. மாநாடு நோக்கத்தையே மடைமாற்றம் செய்து விட்டனர்’ என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசியதாவது:-

மனித வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அக்.2-ம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்துகிறோம்.

அனைவருக்குமான கோரிக்கை என்றபோது அனைத்து கட்சிகளும் பங்கேற்பதில் என்ன தவறு. எனவே அதிமுகவும் இதில் பங்கேற்கலாம் என சொன்னதையடுத்து ஒட்டுமொத்தமாக மாநாட்டின் நோக்கத்தையே மடைமாற்றம் செய்துவிட்டனர். தேர்தல் நோக்கத்துக்காக மாநாட்டை விசிக நடத்துகிறது என்றும், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது என அவரவர் கற்பிதங்களை பரப்பி வருவது கவலையளிக்கிறது.

அதேபோல், மண்டல வாரியாக செயற்குழு கூட்டத்தில் நான் பேசியபோது நினைவுகூர்ந்ததை வைத்து, அதிகாரத்தில் பங்கு தந்தால் மட்டுமே கூட்டணியில் நீடிப்போம் என்பதுபோல் கொள்கை எதிரிகள் விமர்சனங்களை முன்வைத்தனர். எந்த நோக்கத்துக்காக மாநாட்டை ஒருங்கிணைத்தோமோ அந்த நோக்கத்தை சிதறடிக்கக் கூடிய வகையில் விவாதங்களை மடைமாற்றம் செய்தது வேதனை தருகிறது.

இவ்வாறு நமக்கு கொடுத்த நெருக்கடிகளால் மாநாட்டு பணிகளில் போதிய கவனம் செலுத்த இயலவில்லை. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மாநாட்டுக்கு தொண்டர்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்து, அக்.1 (இன்று) வீதிவீதியாகச் சென்று மாநாட்டின் கருப்பொருளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோல சமூக ஊடகங்களில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தேவையற்ற பதிவுகளை பரப்புவதாகத் தெரிகிறது. எனது கவனத்துக்கு வராமல் யாரும் உட்கட்சி விவகாரத்தை எக்காரணத்தைக் கொண்டும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யக் கூடாது. தேர்தல் முடியும் வரையிலாவது எனது ஒப்புதலோடு யூடியூப் போன்ற சமூகஊடக தளங்களில் பேட்டி கொடுங்கள்.

கருத்து சொன்னால்தான் ஜனநாயகத்தை காக்க முடியும் என்ற நிலை இல்லை. நானும் ஒவ்வொரு நாளும் ஊடகவியலாளர்களை தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நாம் ஏதேனும் வார்த்தையை விட்டால் அதை பிடித்துக் கொண்டு நமக்கு எதிராக குழி பறிக்கிறார்கள். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உளுந்தூர்பேட்டையில் நாளை (அக்.2) நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டு திடலை திருமாவளவன் நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தேசத் தந்தை காந்திஜி வலியுறுத்திய, தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவரது பிறந்த நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் எந்த பாகுபாடும் இன்றி, ஒருமித்த குரலில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்என்ற நோக்கத்தோடு தான் இந்தமாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டு, பொதுவான அழைப்பு விடுக்கப்பட்டது. ஊடக விவாதத்தில் பங்கேற்றவர்களும், கொள்கை பகைவர்களும் பிரச்சாரங்களின் மூலம் அதைத் தடுத்து விட்டனர். இதனால் திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே பங்கேற்க கூடிய ஒரு மாநாடாக நடைபெறுகிறது.

ஆட்சியும், அதிகாரமும் வேண்டும் என்பது எங்கள் கொள்கை. அதற்கு எங்களைத் தயார்படுத்தும் வரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். தமிழக அமைச்சரவையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக முதல்வரை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.