பிரதமர் பேச்சைக் கேட்டு பொன்முடியை வேறு துறைக்கு மாற்றியுள்ளனர்: ஜெயக்குமார்!

பிரதமரின் பேச்சைக் கேட்டு பொன்முடியை வேறு துறைக்கு மாற்றியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அமைச்சரவை கடந்த 28ஆம் தேதி திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றனர். அதே சமயம் சீனியர் அமைச்சரான பொன்முடியின் உயர்கல்வித் துறை இலாகா பறிக்கப்பட்டு, அவர் வனத் துறை அமைச்சராக பதவி இறக்கம் செய்யப்பட்டார். பொன்முடி இலாகா பறிப்புக்கு ஆளுநர் உடனான மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதால் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடப்போவது இல்லை. விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு பிரச்னை, மின்சார கட்டணம் உயர்வு என எந்த பிரச்னையும் மாறப்போவது இல்லை. மழை வரும் நேரத்தில் வெள்ள வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சுருக்கமாக சொல்வது என்றால் காமெடி தர்பார் நடத்துகிறார்கள். இன்னும் ஒன்றரை வருடங்கள் இதனை சகித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்” என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து, “தமிழக அமைச்சரவை மாற்றத்தால் மக்களுக்கு யாருக்கும் மாற்றம் வரப்போவது இல்லை. புதிதாக பொறுப்பு ஏற்ற அமைச்சர்களுக்குதான் அது மாற்றம். ஆனால், பாவம் பொன்முடிக்குதான் இது ஏமாற்றமாக அமைந்துள்ளது. சீனியராக மாடாக ஓடாக திமுகவுக்காகவும் ஸ்டாலினுக்காகவும் உழைத்தவர். அப்படிப்பட்டவரை ஆளுநரின் பேச்சைக் கேட்டு வேறு துறைக்கு மாற்றிவிட்டனர்.

ஆளுநருக்கும் பொன்முடிக்கும் இணக்கமான சூழல் இல்லை என்ற காரணத்துக்காக, பொன்முடி உயர்கல்வித் துறை இலாகாவை வகிக்கக் கூடாது என்று சொன்னால் அதனை கேட்டுக்கொண்டு வந்துவிட வேண்டுமா? இதனைத் தான் பிரதமரிடம் கேட்டுவிட்டு வந்தாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? அதனை கேட்டு வந்த பிறகு மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொன்முடி உள்பட அனைவரும் பவள விழாவுக்கு ஒன்றாக சென்றார்கள். ஆனால், அதன்பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பொன்முடி இல்லை. அதேபோல அமைச்சர் துரைமுருகனும் வெந்து நொந்து போய்விட்டார்” என்றும் விமர்சனம் செய்துள்ளார்.