எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீச்சு: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஐடி விங் சார்பில் எல்இடி திரை கொண்ட பதாகையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது, செல்போன் ஒன்று பறந்து வந்து எடப்பாடி பழனிசாமி மீது விழுந்தது. எடப்பாடி பழனிசாமியின் இடது தோள்பட்டை மற்றும் காது மீது செல்போன் விழுந்த நிலையில், அதனை தட்டிவிட்டு சிரித்த முகத்தோடு இருந்தார். அதே சமயம் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் இருந்த திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் கடும் ஆத்திரம் அடைந்தனர். எனினும், செல்போன் தவறுதலாக வந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுகவில் இருந்து பெரிய ரியாக்‌ஷன் எதுவும் காட்டப்படவில்லை. ஆனால், ஓபிஎஸ் மகனும், முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது தொலைபேசி எறிந்த செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரிகமான செயலாகும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும் சீர்திருத்தமும் குறைவாகக் கூடாது என்ற ஓபிஆர், வன்முறையைத் தூண்டக்கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

மேலும் இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும், தலைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் மற்றும் பாதுகாவல் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அட்வைஸ் செய்தார்.

அதிமுகவில் இருந்து 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட போது அவருடன், கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத்தும் நீக்கப்பட்டார். அவரை அதிமுக உறுப்பினராக அங்கீகரிக்கக் கூடாது என மக்களவை சபாநாயகருக்கே அதிமுக தரப்பு கடிதம் எழுதியது. ஆனால், அவர் அதிமுக மக்களவை உறுப்பினர் என்றே கடைசி வரை செயல்பட்டார். தற்போது அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுகள் பலமாக எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான செல்போன் வீச்சை ஓபிஆர் கண்டித்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.