காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி இன்று (அக்.2)டெல்டா மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், நாகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் 2 லட்சம் ஏக்கர் குறுவைப் பயிர்கள் கருகின. குறுவைக்கு காப்பீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். அதன்பின், வேளாண் துறை அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கினர். ஆகஸ்ட் 7-ம் தேதியே தண்ணீர் வறண்டதால், மேட்டூர் அணை மூடப்பட்டது. அதன் பின்னர் வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்துப் போனதால், சம்பாவிலும் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.
ஆனால், சம்பாவுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை முழுமையான இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் தேர்வு, இழப்பீடு பெற்றுத் தருவது ஆகியவை தமிழக அரசின் முழுப் பொறுப்பாகும். எனவே, பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி இன்று (அக்.2)டெல்டா மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.