மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், ஏழைகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க ஒப்புதல் அளித்திருப்பாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காந்தி ஜெயந்தியையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர், நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பார் என காந்தியின் குடும்பத்தில் ஒருவரின் அறிக்கையைப் படித்தேன். அதைப் படித்துவிட்டு என்னையே நான் கேட்டுக்கொள்ளும் கேள்விகள்…
சாதி, மதங்களைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்கள் மீதான தாக்குதல்களை காந்தி அங்கீகரித்திருப்பாரா?
ஆக்கிரமிப்பு என்று கூறி ஏழைகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
விரும்பாத மக்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணிக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
இந்தியாவின் மக்கள்தொகையில் மேலே உள்ள1 சதவீதத்தினருக்கும் கீழ்மட்டத்தில் உள்ள 10/20 சதவீதத்தினருக்கும் இடையிலான சமத்துவமின்மையை விரிவுபடுத்தும் கொள்கைகளை காந்தி அங்கீகரித்திருப்பாரா?
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக குறைக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
இந்த பட்டியல் தொடர்கிறது.. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.