சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் கோரிக்கையை ஏற்றதற்கு பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷனவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இப்போது 2 ரூட்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக 3 ரூட்களில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், இந்த சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வந்தது. இது தொடர்பாகச் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கிடையே சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ 2ம் கட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷனவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்தார். சமீபத்திய சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தை விரைந்து முடிப்பதில் உறுதியாக உள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.