ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், 30 பேர் மீது சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ஆம் தேதி அவரின் இல்லத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் உள்பட 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட ரெளடி திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சித்ததாக அவரை என்கவுன்டர் செய்தனர். தொடர்ந்து, ஆந்திரத்தில் பதுங்கியிருந்த ரெளடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட ரெளடி சீசிங் ராஜாவை கடந்த மாதம் கைது செய்து சென்னை அழைத்து வரும் நிலையில், தப்பிக்க முயன்றதாக அவரையும் சென்னை போலீஸ் என்கவுன்டர் செய்தது. இருப்பினும், ஆம்ஸ்ட்ராங் வழக்கை விசாரிக்க ஆந்திரம் சென்றிருந்த தனிப்படை போலீசார், வேறொரு வழக்கில் ரெளடி சீசிங் ராஜாவை கைது செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று வியாழக்கிழமை சென்னை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இதில், முதல் குற்றவாளியாக நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக தலைமறைவாகவுள்ள சம்போ செந்தில், மூன்றாவது குற்றவாளியாக அஸ்வத்தாமன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.