இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு பயன்படுவது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்!

இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக பயன்படுவதுதான் வருத்தமளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இதனை வரவேற்க, வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஆனால், தன் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மீது பதிலடி கொடுப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தான் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி உயர்வு அளித்து துணை முதல்வராக நியமனம் செய்துள்ளார். இவ்வளவு விமர்சனங்கள் வரும் அளவுக்கு அவசர கதியில் அவருக்கு ஏன் துணை முதல்வர் கொடுக்கப்பட்டது என்ற கேள்விகள் தமிழகம் முழுக்க எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதால் பெரிய மாற்றம் ஏதுவும் வரப்போவது இல்லை. விவசாயிகள் பயிர் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன் ரத்தாகப்போவது இல்லை, ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படபோவது இல்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கு மகிழ்ச்சியான செய்தி. இதனால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவது இல்லை.

2009ஆம் ஆண்டு ஸ்டாலினை துணை முதல்வராக்கினார் கருணாநிதி. அதன்பிறகு 2011ஆம் ஆண்டில் இருந்து 2021 வரை ஆட்சிக்கு வரவே முடியவில்லை. அதேபோல 2026க்குப் பிறகு ஆட்சி இருக்குமோ இல்லையோ என்பதால் அவசர கதியில் பதவி அறிவித்துள்ளனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் 90 சதவிகிதத்துக்கு மேல் நிறைவேற்றாமல் உள்ளது.

அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள் என்றால், 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார். எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வேட்பாளரை நிறுத்துகிறார். தி.மு.க.வுக்கு எதிராக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கண்டுபிடித்த வெற்றிச் சின்னமான இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக பயன்படுவதுதான் வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.