புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் கூல் லிப், குட்கா, புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களை விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன், முன் ஜாமீன் கோரி தாக்கலான மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் வாதிடுகையில், “தமிழக அரசு தமிழகத்தில் கூல் லிப், குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் தடை செய்துள்ளது. இருந்தபோதும் அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்காக சட்ட விரோதமாக கொண்டு வருகின்றனர். இது கடுமையான நடவடிக்கையின் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதனை மீறி விற்பனை செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பலர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். பக்கத்து மாநில அரசுகளுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. குட்கா பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என வாதிட்டனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கூல் லிப், குட்கா வகை பொருட்கள் வேறு மாநிலங்களில் அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் எந்த தயாரிப்புக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும், இவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து வருகிறது.” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, “தற்போது கூல் லிப், குட்கா புகையிலைப் பொருட்களை இளைஞர்களை தாண்டி, பள்ளி மாணவர்களும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பல பள்ளி மாணவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், உடல் நலமும் பாதிக்கப்பட்டு வாய் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது எவ்வாறு குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்களோ அதே போல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை முற்றிலும் தடை செய்ய முடியும். எனவே இந்த நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் போதைப் பொருட்களை தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளை பிறப்பிக்க உள்ளது” எனக் கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தார்.