திண்டுக்கல் ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது போலீஸ் துப்பாக்கி சூடு!

திண்டுக்கல், பேருந்துநிலையம் பாலாஜிபவன் எதிரே பென்சனர் காம்பவுண்ட் சாலையில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய முகமதுஇர்பான் என்பவரின் தலையை சிதைத்து செய்த வழக்கில் தொடர்புடைய ரவுடி ரிச்சர்டு சச்சின், போலீசாரை தாக்கி தப்ப முயற்சித்த நிலையில், அவனது வலது காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி இர்ஃபான் இவர் தனது நண்பர் முகமது அப்துல்லா உடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது இவர்களை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் சரமாரி வெட்டியுள்ளனர். இதில் இர்ஃபான் முகம் சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முகமது அப்துல்லா அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தார். பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் இர்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் படுகொலை குறித்த விபரம் கேட்டறிந்தார். படுகொலை செய்யப்பட்ட இர்ஃபான் மீது கொலை உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு திமுகவை சேர்ந்த பட்டறை சரவணன் படுகொலையில் இர்ஃபான் முக்கிய குற்றவாளி ஆவார். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். பழிக்குப் பழியாக இர்பான் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளில் சிலர் கோர்ட்டில் ஆஜராவதாக கூறப்பட்டதால் நீதிமன்றங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை வழக்கில் திண்டுக்கல் முத்தழகு பட்டியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரது மகனான மார்ட்டின் நித்திஷ், செல்வராஜ் என்பவரது மகனான எடிசன் சக்கரவர்த்தி, மாரம்பாடியை சேர்ந்த செபஸ்தியார் மகன் பிரவீன் லாரன்ஸ் ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து முத்தழகு பட்டியை சேர்ந்த எடிசன் ராஜ், சைமன் செபஸ்தியார் ஆகிய இருவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான ரிச்சர்ட் சச்சின் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் கடந்த 25ஆம் தேதி காப்பிளியபட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹேம தயாள வர்மன், 26ஆம் தேதி வேடசந்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாசி, 28ஆம் தேதி பேகம்பூர் பகுதி சேர்ந்த பிரபல ரவுடி முகமது இர்பான் என, நேற்று கூத்தம்பட்டியில் ரஞ்சித் என 6 தினங்களில் 4 படுகொலைகள் நிறைவேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் கொலை சம்பவங்களால் திண்டுக்கல் போலீசாரும் கடும் சிக்கலை எதிர் கொண்ட நிலையில் அடுத்த கொலை சம்பவங்கள் நடக்காமல் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மற்ற மாவட்டங்களில் நடந்தது போல என்கவுண்டர் சம்பவம் திண்டுக்கல்லில் நடைபெறலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இர்ஃபான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடியான ரிச்சர்ட் சச்சினை காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்தனர். இர்பானை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை அவர் திண்டுக்கல் அருகே இருக்கும் மாலப்பட்டி சுடுகாடு பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். இதனையடுத்து அந்த சுடுகாட்டுக்கு ரிச்சர்ட் சச்சினை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த பகுதியை அடையாளம் காட்டி ஆயுதங்களை எடுத்து ரிச்சர்ட் சச்சின் கொடுக்க முயன்ற போது திடீரென ஆயுதங்களால் போலீசை நோக்கி தாக்கத் தொடங்கினார். இதில் காவலர் அருண் என்பவர் காயமடைந்த நிலையில், அங்கிருந்து ரிச்சர்ட் சச்சின் தப்பி ஓட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்காப்புக்காகவும், குற்றவாளியை தடுக்கும் நோக்கிலும், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் ரவுடி ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் சுட்டனர். இதில் காயமடைந்த சச்சின் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காவல் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.