சனாதன தர்மத்தை காப்பாற்ற உயிர் கொடுப்போம் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்றிரவு திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ஜெகன் ஆட்சியில் திருப்பதி நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதற்கு 11 நாள் பிராயச்சித்த விரதத்தை நிறைவு செய்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று இரவு திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
திருப்பதி பிரசாதத்தில் கலப்படம் நடந்துக்கொண்டிருக்கிறது என நான் தேர்தல் பிரச்சாரத்திலேயே கூறினேன். அதை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. ஏழுமலையானுக்கு ஒரு தீங்கு நடந்தால் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? திருமலை ஏழுமலையான் கோயில் பிரசாதம் தயாரிப்பதில் தவறு நடந்தது. நான் விரதம் இருந்தேன். ஆனால் இதனை கூட அசிங்கமாக சித்தரிக்கின்றனர். நான் ஒரு சனாதன இந்து என கூறிக்கொள்வதை பெருமையாக கொள்கிறேன். எனது மகள் கிறிஸ்துவத்தை தழுவி உள்ளதால், நான் திருமலைக்கு வந்த போது, அவளையும் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட வைத்தேன். அதன் பிறகே அவளை தரிசனத்திற்கு அழைத்து சென்றேன். சனாதன தர்மம் மீது எனக்கு அதீத விசுவாசம்.
தமிழில் பேசுகிறேன்: தமிழர்கள் இங்கு இருப்பதால் தமிழிலேயே பேசுகிறேன். தமிழகத்தில் உள்ள ஒரு இளம் அரசியல்வாதி என்ன கூறினார் தெரியுமா? சனாதன தர்மம் ஒரு வைரஸ் அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என பேசினார். (தமிழக துணை முதல்வர் உதயநிதியை மறைமுகமாக குறிப்பிட்டார்) இதை போல் ஒரு கிறிஸ்தவத்தையோ, இஸ்லாத்தையோ நீ பேச முடியுமா? நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? நாம் ஒற்றுமையாக இல்லாததே இதற்கு அடிப்படை காரணம். நல்லவர்களை கையாலாகாதவர்கள் என இவர்கள் நினைத்து விட்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்துக்களுக்கு ஒற்றுமை கிடையாது. அதனால்தான் பலர் நம் மீது ஏறி சவாரி செய்கிறார்கள்.
வேற்று மதத்தை தவறாக பேசினால் பலர் வரிந்து கட்டி கொண்டு வருகிறார்கள். சினிமா துறை, அரசியல் துறையை சேர்ந்த பலர் இதில் உள்ளனர். ஆனால், இந்து மதத்தை யாராவது தவறாக பேசினால் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். இது ஏன்? இயேசு மற்றும் அல்லா குறித்து தவறாக பேசினால் நாட்டை தீ வைத்து கொளுத்துகிறீர்களே. நாங்கள் ஏன் ராமரையோ, கிருஷ்ணரையோ, ஏழுமலையானையோ தவறாக பேசினால் கொந்தளிக்க கூடாது ?
காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை வாராஹி இந்து நம்பிக்கை பதிவேடு உள்ளது. சனாதன தர்மத்திற்காக நாம் அனைவரும் ஜாதி, கட்சி பாகுபாடின்றி ஒருகுடையின் கீழ் வர வேண்டும். இதற்காகத்தான் இந்த வாராஹி பதிவேட்டினை அறிமுகப்படுத்துகிறேன். அதில் உள்ள நிபந்தனைகள் வருமாறு: எந்த மதத்திற்கோ, தர்மத்திற்கோ தீமை நடந்தால் நாம் எதிர்க்க வேண்டும். நாடு முழுவதும் சனாதன தர்மத்தை காக்க ஒரு சட்டம் தேவை, இதனை அமல்படுத்த சனாதன தர்ம பரிரக்ஷன வாரியம் அமைக்க வேண்டும். தூய்மையான கோயில் பிரசாதங்கள் உபயோகப்படுத்தும் முறை கொண்டு வரப்பட வேண்டும். கோயில்கள், சுவாமியை தரிசிக்கும் மையங்களாக இல்லாமல் கல்வி, இந்து கலாச்சாரம், சுற்றுலா மையங்களாக இருத்தல் அவசியம்.
திருப்பதி பிரசாதம் கலப்பட விவகாரம் சின்ன விஷயம் அல்ல. இது பிரசாதம் குறித்த பிரச்சனை அல்ல. பல கோடி மக்களின் நம்பிக்கைக்குரிய விவகாரம். நெய் விஷயத்தில் தவறு நடந்தது என கூறினால், எங்களை திட்டுகின்றனர். தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி எங்கே போனார் ? எங்கே மறைந்து கொண்டிருக்கிறார் ? நம் சனாதன தர்மத்தை நாம் காப்பாற்றி கொள்வோம். நம் சனாதனத்தை இழிவு படுத்தினாலோ, அவமானப்படுத்தினாலோ உயிரை கொடுத்தாவது நம் சனாதன தர்மத்தை காப்பாற்றுவோம். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.