விஸ்வகர்மா தொடர்பாக வானதி பேசிய வீடியோ சர்ச்சையாகியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தற்போது வானதி சீனிவாசன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கோவை செல்வபுரம் அசோக் நகர் திருமண மண்டபத்தில், விஸ்வகர்மா சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
மற்ற மாநிலங்களில பணத்தை வாங்கிக் கொண்டு தொழிலில் முன்னேறிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் இத்திட்டத்தை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் உள்ளது. இந்தத் தொழிலை குலத்தொழில் என திமுகவினர் கூறுகின்றனர். குலத்தொழிலை அனுமதிக்க மாட்டேன் என்று திமுகவினர் சொல்கின்றனர். விஸ்வகர்மா சமூக மக்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எதை சமூக பெருமை என்று பேசுகின்றீர்களோ? உங்களுக்கு பெருமையே கிடையாது என்று அவர்கள் சொல்லுகின்றனர். உங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை கொடுக்க பிரதமர் மோடி காத்திருக்கிறார். கை தூக்கி விட காத்திருக்கிறார். பிற மாநிலங்கள் எல்லாம் விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்தும்போது உங்களது கோபம் மாநில அரசின் மீது இருக்க வேண்டும். தமிழக அரசின் மீது உங்களுக்கு கேள்வி கேட்க முடியவில்லை. அந்த திட்டத்தில் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்தால் அதை சந்தைப்படுத்த உதவும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வானதி சாதிய அரசியல் செய்கிறார் என அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து வானதி தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது:-
குலத்தின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் மட்டுமே பதவிகளை வழங்கி, திமுக வாரிசு அரசியல் செய்கிறது. நலிவடைந்த பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்தின் மீதும் அதை ஆதரிப்பவர்கள் மீதும் சாதி சாயம் பூச முயல்வது கடும் கண்டனத்திற்குறியது.
கோவையில் நடந்த கைவினைக் கலைஞர்களுடனான சந்திப்பில், மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ‘விஸ்வகர்மா’ என்ற திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டை ஊக்குவிப்பதைப் பற்றி கூறினேன். அதேபோல திமுக தனது அரசியல் ஆதாயங்களுக்காக அத்திட்டத்தின் பலன்கள் தமிழக கைவினைஞர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதைப் பற்றியும் மட்டும்தான் எனது உரையாடல் இருந்தது. அதில் விஸ்வகர்மா திட்டத்தில் இணைந்தால், விஸ்வகர்மா என்ற சாதிப் பெயரில் நாங்கள் அடைபட்டுவிடுவோம், இதனால் எங்கள் சமுதாயம் பாதிப்படையும் என்ற அச்சமுதாய மக்களின் கோரிக்கைகளுக்கு நான் அளித்த விளக்கத்தில் இருந்து ஒரு பாதியை மட்டும் வெட்டி எடுத்து வழக்கம் போல பொய் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்.
அனைத்திலும் சாதி முலாம் பூசி அரசியல் செய்யும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்டு வழக்கறிஞர் துறையை எனது தொழிலாக தேர்ந்தெடுத்த நான், குலத்தொழில் முறையை ஆதரித்து பேசியது போன்ற ஒரு மாயையை உருவாக்க முயல்வது சற்றும் ஏற்புடையதல்ல. தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தின் பலன்களைத் தமிழக மக்களுக்கு கிடைக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் திமுக, எங்கே தமிழக மக்களுக்கு உண்மை தெரிந்து நம்மை கேள்வி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் எனது பேச்சை மடை மாற்றி சாதிய வன்மத்தை தூண்ட முயற்சிக்கிறது.
காலங்காலமாக சாதியையும் மதத்தையும் வைத்து மக்களைப் பிளவுண்டு அரசியல் செய்யும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், நமது தேசத்தின் பொக்கிஷங்களான பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றத்திலும் அதே உத்தியைக் கடைபிடிக்க வேண்டாம் என்றும், நீங்கள் எவ்வளவுதான் பொய் பிரச்சாரத்தை பரப்பினாலும் உண்மையை மக்களுக்கு நாங்கள் எடுத்துரைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.