வைகை ஆற்றுப்பகுதியை சுத்தம் செய்ய சிலர் பணம் கேட்டு தன்னை மிரட்டியதாக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வைகை ஆற்றை சுத்தம் செய்ய நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் பணம் கேட்டு வழக்கறிஞர்கள் என, கூறி 3 பேர் ஆதீனத்திற்கு வந்தனர். சுமார் 20 நாள் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான பணத்தை நீங்கள் தர வேண்டும் என, கேட்டனர். இதற்கு நான் தர முடியாது என்றேன். ஆற்றை சுத்தம் செய்ய அரசு இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். அனைவரும் சேர்ந்து தான் சுத்தம் செய்ய வேண்டும். தனிமரம் தோப்பாகாது உங்களால் செய்ய முடியாது என்ற போது, இதற்கு முன்பு இருந்த ஆதீனம் எங்களுக்கு பணம் கொடுத்தார் என கூறினர். இது போன்று பலர் அவரை ஏமாற்றி விட்டு சென்றுள்ளனர். உங்களுக்கு பணம் கொடுக்க முடியாது என்றேன். உடனே அவர்கள் என்னை அவதூறாக பேசி விட்டு சென்றனர். ஆதீனமாக இருக்க, எனக்கு தகுதி இல்லை எனவும் கூறிவிட்டு நகர்ந்தனர். அந்த நபர்கள் பற்றி காவல் நிலையத்திற்கு புகார் புகார் அளிக்க மாட்டேன். அடிக்கடி என்னை மிரட்டினால் அவர்களை நானே பார்த்துக் கொள்வேன்.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து நான் பேச மாட்டேன். திருப்பதி ஆந்திரா மாநிலம். தமிழ்நாட்டைப் பற்றி கேளுங்கள் சொல்கிறேன். பழனியில் நடந்த முருகன் மாநாட்டுக்கு அழைத்ததால் சென்றேன். அதற்காக திமுகவில் இணைந்து விட்டேன் என, அர்த்தமில்லை. துணை முதல்வரான உதயநிதிக்கு எனது வாழ்த்துக்கள். சினிமாக்காரர்கள் பற்றி பேச மாட்டேன். சுதந்திரத்திற்காக பாடுபட்டோரை பற்றி கேளுங்கள் பேசுகிறேன். கையிலுள்ள 5 விரல்களும் ஒன்றாகவா இருக்கிறது. 4 பேர் மிரட்டுவர், உருட்டுவர், இதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது” என்றார்.
பழைய ஆதீனம் தற்காப்புக்கென துப்பாக்கி வைத்திருந்தார், உங்களுக்கு அது தேவை இல்லையா? என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆதீனம், “பெரியாரும் தமிழ் ஆர்வலர், நானும் தமிழ் ஆர்வலர் தான். துப்பாக்கி எல்லாம் இருக்கிறது. எனக்கு எனது வாயே துப்பாக்கி. வாயிலேயே பேசிக் கொள்கிறேன்” என்றார்.