படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றுதான் கூறினோமே தவிர, முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவோம் என்று கூறவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டை அருகே அகரப்பட்டியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால்தான், முழு மதுவிலக்கு சாத்தியம். அதேநேரத்தில், தமிழகத்தில் முழு மதுவிலக்கு என்பதுதான் முதல்வரின் லட்சியம். அதை நிறைவேற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னோம். அதனால்தான் திமுக வெற்றி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகூட எழுந்தது. 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றுதான் கூறினோமே தவிர, முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவோம் என்று கூறவில்லை. அதனடிப்படையில், திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகளை குறைத்துள்ளோம்.
டாஸ்மாக் கடைகளை மூடுவதாகக் கூறி எஃப்.எல்.2 (மனமகிழ் மன்றம்) போன்ற மதுக் கடைகளை திறப்பதாகக் கூறுவது தவறு. எஃப்.எல்.2 கடைகளுக்கும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் வேறுபாடு உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.