மெரீனாவில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை: சீமான்!

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சாகசத்தைப் பார்ப்பதற்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கணக்கானோர் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அதிமுக, பாஜக, பாமக, தவெக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஐந்து பேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

இந்திய வான்படையின் 92வது தொடக்க நாள் நிகழ்வையொட்டி, சென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படையின் வீர தீர செயல் நிகழ்ச்சியின்போது கூட்டநெரிசலில் சிக்கி, உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு ஐந்துபேர் உயிரிழந்திருக்கிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது. இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதும், வீர தீர நிகழ்ச்சி ஐந்து உயிர்களின் பேரிழப்போடு நிறைவு பெற்றிருப்பதும் பெரும் வேதனையைத் தருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

15 லட்சம் பார்வையாளர்களை வரவழைத்து, அதிகப்படியாகப் பார்க்கப்பட்ட வான்படை வீர தீர நிகழ்ச்சியாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதை இலக்காகக் கொண்டு இந்நிகச்சி நடத்தப்பட்டுள்ளது. அவ்வளவு இலட்சம் பேருக்கான முன்னேற்பாட்டை செய்யாத மாநிலத்தை ஆளும் திமுக அரசின் நிர்வாகத்தோல்வியே ஐந்து பேரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. ஓரிடத்திலே இத்தனை இலட்சத்துக்கும் மேலான மக்கள் கூடினால், அங்கு ஏற்பாடு செய்ய வேண்டிய இலவசக் குடிநீர், கழிவறை வசதிகள், முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான குடில்கள், போக்குவரத்து ஒழுங்கு, மருத்துவ ஏற்பாடுகள், போதிய மீட்புக்குழுக்கள், காவல்துறையினர் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளும் சரிவர அமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படாததே மக்களைப் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி, ஐந்து உயிர்களைப் போக்கியிருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டுக்கும், பொதுக்கூட்டத்துக்கும் ஏகப்பட்ட நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து, கெடுபிடி செய்யும் ஆட்சியாளர் பெருந்தகைகள், கடற்கரையில் 15 இலட்சம் பேரை எந்த அடிப்படையில் கூடவிட்டார்கள் எனும் அடிப்படைக் கேள்விக்கு என்னப் பதிலுண்டு?.

ஒக்கி புயலில் சிக்குண்டு எங்கள் மீனவச் சொந்தங்கள் நடுக்கடலில் தத்தளித்தபோது வராத வான்படை, குரங்கணி காட்டுத் தீவிபத்தில் மாட்டிக்கொண்ட எங்கள் பிள்ளைகளை மீட்க வராத உலங்கு ஊர்திகள், இப்போது கடற்கரையில் வேடிக்கைக் காட்டுவதன் மூலம் தமிழினத்திற்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன?.

கடந்த 29ஆம் தேதி அன்று வான்படை துணைத் தளபதி ஊடகத்தினரிடம் 15 இலட்சம் மக்களை எதிர்பார்க்கிறோம் என்றும், அதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்யவிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிற நிலையில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக வந்துவிட்டது என்று இன்று திசை திருப்புவதன் காரணம் என்ன?.

‘திராவிட மாடல்’ என தற்பெருமை பேசும் திமுகவின் ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், வன்முறைத் தாக்குதல்கள், போதைப் பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம், வரைமுறையற்ற மது, கள்ளச் சாராயம் என சட்டம்-ஒழுங்கு ஒருபக்கம் சந்தி சிரிக்கையில், மறுபக்கம், மக்கள் ஒன்றுகூடும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வைக்கூட உயிரிழப்பு இல்லாது நடத்த வக்கற்று அரசின் நிர்வாகம் தறிகெட்டு நிற்கிறது. விடுமுறை நாளில் மனமகிழ்வடைய கேளிக்கைக்காக கடற்கரைக்குச் சென்ற பொதுமக்கள் பிணமாய் வீடு திரும்புவதென்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகிக்கவே முடியாத பெருங்கொடுமை. மொத்தத்தில், ஐந்து பேரின் மரணம் என்பது ஆளும் திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலையாகும். நாடு தழுவிய அளவில் கவனம்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக்கூட சரிவர ஒருங்கிணைத்து நடத்தத் தவறிய ஆளும் திமுக அரசுக்கு என்னுடைய வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.