சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரம்மாண்டமாகவும், மிக பிரமிப்பாக நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது எனவும், போதிய ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு இருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஏராளமான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பட்டு வருகின்றனர். ஆண்டுக்கண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், மார்பக புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிங்க் என்ற தன்னார்வ அமைப்பு சார்பாக சென்னை விமான நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டது வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடம் கடந்த ஒன்றாம் தேதி துவங்கி இந்த மாதம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில், சுமார் 300 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சென்னை விமான நிலையத்தின் வளாகம் முழுவதும் இளம் சிவப்பு நிற ரிப்பன் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சௌமியா அன்புமணி கல்லூரி மாணவர்களிடம் ஊர்வலமாக நடந்து சென்றார்.
அதனைத் தொடர்ந்து சௌமியா அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உணவுகள் அனைத்தும் கலப்படம் ஆகிவிட்ட நிலையில் தாய்ப் பாலிலும் கலப்படம் இருப்பதாக கூறுகின்றனர். அது மட்டும் இன்றி அனைத்து பெண்களிடமும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். 100 சதவீதம் குணப்படுத்தக் கூடிய நோய் தான் மார்பக புற்றுநோய். நகர்ப்புறங்களில் போதுமான விழிப்புணர்வு இருந்தாலும் இத்தகைய விழிப்புணர்வை கிராமப்புறங்களில் கொண்டு செல்வது தான் முக்கியமானதாக இருக்கிறது.
மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் உயிரிழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மாநாடு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கும் பொழுது மக்கள் அதிகமாக கலந்து கொள்ளும் வகையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என ஏற்கனவே விமானப் படை சார்பாகவும் தெரிவித்திருந்த நிலையில், முறையான ஏற்பாடுகள் செய்யாதது வருத்தம் அளிக்கிறது. பலர் கூறும் பொழுது காவல்துறை வாகனங்களே கூட்ட நெரிசலில் சிக்கி தவித்ததாக தெரிவித்தனர். ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாமல் தவித்த காட்சிகளை பார்க்க முடிந்தது.
இந்த நிகழ்வில் நடந்த உயிரிழப்பு மற்றும் குளறுபடிகளுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். உலக சாதனை படைப்பதற்காக நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வில் உயிரிழப்பு ஏற்பட்டது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே 32 டிகிரி வெப்பம் இருந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடியதால் மேலும் அந்த வெப்பம் அதிகமாகவே காணப்பட்டிருக்கும். குடிநீர், பாதுகாப்பு போன்ற முக்கிய தேவைகளில் தமிழக அரசு கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அப்படி செலுத்தி இருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.