திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்.7) திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
அருந்ததியினருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் உள்ளன. இதனால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள், ஆதிதிராவிடர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சத்தம் இல்லாமல் சமூக நீதி படுகொலை செய்யப்படுகிறது. தென் தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் நவம்பர் 6 அல்லது 7 -ம் தேதி சென்னையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் மாஞ்சோலை விவகாரத்தில் முறையான விசாரணை மேற்கொண்டு வருகிறது. கூடுதல் தகவல்களை விசாரணை அலுவலர்கள் எங்களிடம் கேட்டுள்ளனர். 1998-ம் ஆண்டுக்கு முன்பு மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 80 வயதைக் கடந்த நபர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டெல்லி அழைத்துச்சென்று ஆணையம் முன்பு ஆஜர்படுத்த உள்ளோம்.
விரைவில் ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஆணைய தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மாஞ்சோலை விவகாரத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், அரசுத் துறைகளும் காலனி ஆதிக்க முறையை கைவிட வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண வந்திருந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
அதேசமயம் அரசும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். தேர்தல் வரும்போது வாக்காளர்களுக்கு ரூ.500, ரூ.1000 கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வரும் 2026 தேர்தலில் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.