சித்தராமையா மீது நில முறைகேடு வழக்கு உள்ளதால், கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் இன்று (அக்.7) சுவாமி தரிசனம் செய்தார். சிறப்பு வழியில் சென்று மூலவரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர், மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையை இருகரம் கூப்பி வணங்கினார். அதன்பிறகு, உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு முன்பு, அண்ணாமலையாரை தரிசனம் செய்தேன். அதன்பிறகு, கர்நாடக மாநிலத்தில் சிறந்த ஆட்சி அமைந்தது. நல்ல மழை பொழிவும் இருக்கிறது. அதன்பிறகு, அண்ணாமலையாரை மீண்டும் இன்று வந்து தரிசனம் செய்துள்ளேன். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் சுற்று பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாமலையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கலைநுட்ப சிற்பங்களை பார்க்குபோது அற்புதமாக உள்ளன” என்றார்.
பின்னர் அவர், செய்தியாளர்கள் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் வருமாறு:
கேள்வி: இந்தியாவில் நதிகள் தேசியமாக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கு பலன் தருமா?
பதில்: நிச்சயமாக. நதிகளில் செல்லும் தண்ணீர், கடலில் கலந்து வீணாகிறது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நில முறைகேடு வழக்கு உள்ளதால், அம்மாநில முதல்வராகும் வாய்ப்பு தங்களுக்கு உள்ளதா?
பதில்: நான், அரசியல் பேச வரவில்லை. அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்” என்றார்.