விஜய் மாநாட்டிற்கு 21 கேள்விகள் கேட்ட அரசு, அதே ஏற்பாடுகளை தற்போது செய்யாதது ஏன்: தமிழிசை!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், மரணத்திற்கு அரசே காரணம் என எதிர்க் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள் கேட்ட அரசு, அதே ஏற்பாடுகளை தற்போது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன்.

இந்திய விமானப்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையை சேர்ந்த விமானிகள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் சாகசம் செய்து பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உற்சாகம் ததும்ப பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெயில் காரணமாக சிலர் மயக்கம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கே மெரினா மரணத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் நேற்று மிகக் கொடூரமாக இருந்தது. 5 பேரின் உயிரிழப்பு என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. 5 பேருமே வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த பிறகுதான் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாருமே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் கிடையாது என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள் கேட்ட அரசு, அதே ஏற்பாடுகளை தற்போது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம். நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்? நடிகர் திரு.விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், கோயம்பேட்டில் நடக்கவிருந்த பாஜகவின் மாநாடு அதேபோல் ஆண்டாண்டு நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி, எத்தனை மருத்துவர்கள், எத்தனை செவிலியர்கள், எத்தனை உதவியாளர்கள் என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு. நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்?

கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதலமைச்சர் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.