மனிதவள மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய மனிதவள மேலாண்மைக் கழகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆசிய எச்ஆர்டி விருதுக்குழு தலைவருமான ஃபாமி ஜோவ்தர், மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதியும் விருதுக்குழு துணைத் தலைவருமான முகமது வஹீத் ஆகியோர் இந்த விருதை வழங்கினர். சென்னை தலைமைச் செயலகத்தில், நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதை வழங்கினர். சமுதாய மேம்பாட்டுக்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும், விடா முயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக, ஆசிய எச்ஆர்டி விருதுகள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினர்.
இந்த நிகழ்வின்போது தலைமைச் செயலர் நா.முருகானந்தம், ஆசிய எச்ஆர்டி விருதுகள் நிறுவனரும், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான டத்தோ பாலன், துணைவேந்தர் டேவிட் விட்போர்டு, மலேசியா எஸ்எம்ஆர்டி ஹோல்டிங்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் மஹா ராமநாதன், மனிதவள மேலாண்மைக் கழக முதன்மை செயல் அலுவலர் டத்தோ விக்கி, ஆசிய எச்ஆர்டி விருதுகள் தலைமை செயல் அலுவலர் சுப்ரா, கே.ஏ.மேத்யூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து டத்தோ பாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் 12 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடைபெறுகிறது. முன்னதாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பிடல் வி.ராமோஸ், போஸ்னியா பிரதமர் ஹாரிஸ் டால்சுவேக், மலேசியா நாட்டின் சராவக் முதல்வர் அடேனம் சதேம் போன்ற பல தலைவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்து இந்த விருது வழங்கியுள்ளோம்.
முதலாவதாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்துள்ளனர். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. கல்வி, மனிதவள மேம்பாடுதான் வறுமையை ஒழிக்கும் என்பதில் இக்குழு நம்பிக்கையை கொண்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.