ஆர்எஸ்எஸ் வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்: எச்.ராஜா!

“தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி, துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார்” என எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா தலைமை வகித்தார். விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் கவுதம் நாகராஜன், மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்குப் பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய உள்ளது. இந்த வெற்றியைத் தந்த அரியானா மக்களுக்கு நன்றி. ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக சென்னை மெரினாவில் நடைபெற்ற ஏர்-ஷோ நடந்துள்ளது. இந்த அரசால் மக்களுக்கு குடிநீர் கூட வழங்க முடியவில்லை. தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி, துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார். தமிழக காவல்துறை இதுவரையிலும் எந்த ஒரு தீவிரவாதிகளையும் கைது செய்யவில்லை. கஞ்சாவை தவிர வேறு எந்த ஒரு போதைப் பொருளையும் தமிழக காவல்துறை பிடித்ததாக தெரியவில்லை.

எந்த வகையிலும் தோற்றுப் போன அரசாக திமுக ஆட்சியில் உள்ளது. 2026-ல் மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும். ஓபிஎஸ் பாஜகவின் ஒரு மதிப்புமிக்கவர். அவர் பாஜகவில் இணைவதற்கு முன்னதாக, அது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் கூற முடியாது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால், கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை. அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.

விசிக மது ஒழிப்பு மாநாடு முடிந்தவுடன் தமிழகத்தில் மது ஒழிந்துவிட்டதா? திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் நடத்திய நாடகம். மதுவால் தமிழகத்தில் விதவைகள் அதிகரித்துள்ளதாக பேசிய கனிமொழி, விஷச்சாராயத்தால் உயிரிழந்த விதவைகளை ஏன் சந்திக்கவில்லை? அவர்களை மறந்துவிட்டார்.

அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் தற்போது தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடமுடியாத நிலை தமிழகத்தில் அடுத்த மூன்று மாதத்தில் உருவாகும். தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைக்கு மத்திய அரசை குறைசொல்வதை ஏற்க முடியாது. ஆர்எஸ்எஸ் வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சமூகநீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.