நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் விளையாட அனுமதிக்க முடியாது: ராமதாஸ்!

நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவது என்பதை அனுமதிக்க முடியாது என்றும் தீட்சிதர்கள் மட்டும் விளையாட தனி கிரிக்கெட் மைதானத்தை அரசு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவன ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடி சம்பவம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொடுத்த புகார் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ராமதாஸ், தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு என தனி கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

நடராஜர் கோவிலில் போய் கிரிக்கெட் விளையாடுவது என்பதை அனுமதிக்க முடியுமா என்றால் அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்ததற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தால் அது பெரிய தவறு. அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஒரு தனி மைதானம் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இங்கு தீட்சிதர்கள் மட்டுமே கிரிக்கெ விளையாட முடியும் என்ற விளம்பர பதாகையை வெளியே வைக்கலாம். இனி பல கோவில்களில் இந்த விளையாட்டு கோவில்களில் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இனி பல கோவில்கள் விளையாட்டு மைதானங்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த திங்கள்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனை சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி இளையராஜா வீடியோவாக எடுத்துள்ளார். சுவாமி தரிசனம் செய்ய வந்த போது தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததால் இதனை வீடியோவாக எடுத்ததாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் சொல்ல்படுகிறது. இதில் இளையராஜா காயமடைந்ததாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவின் எச்.ராஜாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த எச்.ராஜா, “கிரிக்கெட் விளையாடினால் என்ன தவறு. கோயில் கர்ப்பக்கிரகத்திலா விளையாடினாங்க?.. உடற்பயிற்சி, விளையாட்டு என்பது எல்லோரும் செய்ய வேண்டும். இதில் எந்தவொரு தப்பும் கிடையாது” என்று கூறினார்.