கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களால் தான் கோவை விஸ்கோஸ், பிரிக்கால், ஸ்டாண்டர்ட் கார் கம்பெனி, சென்னை நோக்கியா, பின்னி மில் என மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை திட்டவட்டமாக கம்யூனிஸ்ட்டுகள் மறுத்துவருகிறார்கள். இதேபோல் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் விளக்கம் அளித்துள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட பத்திரிக்கையாளர் சொல்வது பொய். அவர் தொழிற்சங்கங்களால் மூடப்பட்ட நிறுவனமாக கோவை விஸ்கோஸ், பிரிக்கால், ஸ்டாண்டர்ட் கார் கம்பெனி, சென்னை நோக்கியா, பின்னி மில் என பட்டியலிடுகிறார். உண்மையான காரணமென்ன?
1. கோவை சிறுமுகையிலிருந்த விஸ்கோஸ் நிறுவனம் மிக மோசமான கழிவுகளை பவானி ஆற்றில் வெளியேற்றியது, அதனுடைய டெக்னாலஜி மிகப்பழமையான முறையாக இருந்தது. தொடர்ந்து சட்ட மீறல், விதிமீறலை செய்ததால் நீதிமன்றத்தால் இந்த நிறுவனம் 2001ல் மூடப்பட்டது.
2. கோவை ப்ரிக்கால் நிறுவனத்தில் CITU கிடையாது. சிபிஐ-எம்.எல்-லிபரேசன் அமைப்பின் AICCTU போராட்டத்தை முன்னடத்தியது. பிரிக்கால் நிறுவனம் சம அளவில் சம்பளத்தை தரவேண்டுமென தொழிலாளர்கள் போராடினார்கள். இப்போராட்டத்திற்கு அனைத்து சனநாயக அமைப்புகள், பெரியாரிய அமைப்பு உட்பட மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டமும் நடத்தப்பட்டது. ப்ரிக்கால் நிறுவனம் பண்ணையார் தனத்துடனும், சாதிய உணர்வுடன் இயங்கும் நிறுவனம் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. போராட்டத்தின் பின் 300 தொழிலாளர்களை பழிவாங்கியது ப்ரிக்கால். இதை தொழிற்சாலை தீர்ப்பாயம் கண்டித்து ரத்து செய்யச் சொன்னது. இக்கம்பெனி மூடப்படவில்லை.
3. ஸ்டெண்டர்டு கார் கம்பெனி இங்கிலாந்து கம்பெனியின் பிரிவாக சென்னையில் செயல்பட்ட கம்பெனி. இது கொண்டு வந்த கார்கள் அதிக விலையாகவும், குறைந்த செயல்திறனும், குறைவான மைலேஜும் கொண்டதாக இருந்தது. நிறுவனத்தின் விற்பனை படிப்படியாக குறைந்து வருடத்திற்கு ஆயிரம் கார்கள் எனுமளவில் கூட உற்பத்தி செய்ய இயலாத நிலையிலும், தொழிற்நுட்பத்திற்கான அனுமதியை வெளிநாட்டிலிருந்து பெறமுடியாமலும் முடங்கி போனது. இதனால் இது மூடப்பட்டது. இப்படியாக மூடப்படும் நஷ்ட சூழலில் தொழிலாளர்களுக்கான நஷ்ட ஈட்டை பலி கொடுப்பது முதலாளிகள் வாடிக்கை. இதை கேள்வி எழுப்பினால் தொழிலாளர்கள் மீது பழி போடப்படும் என்பதை அனைவரும் அறிவர்.
4. சென்னை பின்னி மில் போராட்டம் 1920 முதல் திரு.வி.க போன்றோரால் நடத்தப்பட்டு ஆங்கில அரசால் தொழிலாளர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட காலம் முதல் நீண்ட காலமாக தொழிலாளர் விரோத போக்குடைய நிறுவனம். அதன் மெசினரிகள் இந்தியன் வங்கிக்கு பாத்தியப்பட்டவை, மேலும் இன்சூரன்ஸ் பணத்தை பெற்று முடக்காமல் கம்பெனியை மீண்டும் நடத்தவேண்டுமென தமிழக அரசும், தொழிற்சங்கமும் நீதிமன்றத்தில் போராடின. பின்னி மில் போராட்டம் 1921-24 வரை நடந்தது. இந்த போராட்டத்தால் தான் இந்தியாவில் முதல் ‘தொழிலாளர் சட்டம்’ இயற்றப்பட்டது. சென்னையின் மேதின பூங்கா, தொழிலாளர் சிலை, தொழிலாளர் சங்கங்கள் என பல உருவான தொழிலாளர் இயக்கங்களின் பின்னனியில் பின்னிமில், கர்நாடிக் மில், பாம்பே-பர்மா ஆயில்கம்பெனி போராட்டங்கள் உண்டு. இவற்றிலிருந்து உருவான மாபெரும் ஆளுமை இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அழைக்கப்பட்ட தோழர்.சிங்காரவேலர். இச்சமயங்களில் சிங்காரவேலரும், சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் தந்தை பெரியாரும் இணைந்து இயங்கிய தமிழ்நாடு தொழிலாளர் சங்க வரலாறு தனித்துவமானது. சுயமரியாதை-சமதர்ம இயக்கம், தோழர் ஜீவாவின் பங்களிப்பு, தொழிலாளர் இயக்கம் என நிகழ்ந்ததன் பின்னனியில் பின்னி மில் என்பது மறக்க இயலாதது.
5. சென்னை நோக்கியாவின் சிக்கல்கள் இந்தியாவின் வருமான வரி தொடர்புடையது. இந்தியா-பின்லாந்து நாட்டிற்கு இடையேயான (DDTA) ஒப்பந்தங்களை வேறுவிதமாக இந்தியா கையாண்டது என நோக்கியா குற்றம் சாட்டியது. ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே வரிச் சலுகை எனும் ஒப்பந்தத்தை மீறி உள்நாட்டில் விற்பனை செய்ததற்கும் வரிச்சலுகை பெற்று தமிழக அரசை ஏமாற்றியது. நோக்கியாவின் பிறிதொரு நிறுவனத்துடனான ஒப்பந்தம், பணப்பரிமாற்றத்திற்கான வரியை இந்திய அரசு கேட்டது. மேலும் மைக்ரோசாப்ட் கம்பெனியுடனான சச்சரவுகளும் முன்னுக்கு வந்தது. இதுமட்டுமல்லாமல் நோக்கியா மொபைல் போன்களின் சந்தை குறைந்து போனது நாம் அறிந்தததே. சென்னை தொழிற்சாலையில் நடந்த விபத்தில் ஒருபெண் கொல்லப்பட்டார். தொழிலாளர்கள் ஓய்வெடுக்கக்கூட இடமில்லாத விடயங்களை போன்றவற்றை கோரிக்கையாக வைத்த தொழிலாளர்களால் நோக்கியா மூடப்பட்டது என்பது அயோக்கியத்தனம். நட்டமடைந்த நோக்கியா, மிகப்பெரும் வரியாக 15,000 கோடி ரூபாயை கட்டவேண்டிய நெருக்கடி, திருட்டுத்தனமாக உள்நாட்டில் வியாபரம் செய்து வரி ஏய்த்தது என பல காரணங்களால் நோக்கியா மூடப்பட்டு வியட்நாம் சென்றது. இதற்கு காரணம் சொல்லவேண்டுமானால் வருமானவரி துறையை சொல்லலாம்.
உண்மைகளை மறைத்து, பொய் செய்திகளை பரப்புவதால் மென்மேலும் தனிமையடைவீர்கள். ‘ஊடகவியலாளர்’ எனும் பெயரில் டிவி விவாதங்கள், யூட்யூப் பேட்டிகள் என அரசியலற்ற செய்திகளை கடந்த 3 வருடங்களாக பொதுவெளியில் பரப்பி வருகின்றனர். இந்த ‘பத்திரிக்கையாளர்’களில் பெரும்பான்மையோருக்கு வாசிப்பும், களப்பணியும், மக்கள் மீதான அக்கறையும் கிடையாது. இவ்வாறு திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.