அக்டோபர் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த 9-ம் தேதி தெரிவித்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக அல்ஜீரியா, மவுரிடானியா மற்றும் மலாவி நாடுகளுக்கு புறப்பட்டார். இந்த 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுதான் முதல் முறை” என கூறப்பட்டுள்ளது.
ஒரு வார கால பயணத்தின் முதல்கட்டமாக திரவுபதி முர்மு நேற்று அல்ஜீரியா சென்றடைந்தார். தலைநகர் அல்ஜீர்ஸ் விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வசிக்கும் இந்தியர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று அந்நாட்டு அதிபர் அப்தெல் மஜீத் டெபூனை சந்தித்து பேச உள்ளார். பின்னர் இருதரப்பு பிரதிநிதிகள் குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இதில் இருதரப்பு உறவைப் பலப்படுத்து வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அல்ஜீரிய பயணம் முடிந்ததும் 16-ம் தேதி மவுரிடேனியாவுக்கும் அதைத் தொடர்ந்து 17-ம் தேதி மலாவிக்கும் திரவுபதி முர்மு செல்ல உள்ளார். வரும் 19-ம் தேதி நாடு திரும்புகிறார்.
இந்நிலையில், இந்திய சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முர்மு, இரு நாடுகளும் புவியியல் அமைப்பின்படி தொலைவில் இருந்தபோதும், அல்ஜீரியா சுதந்திரம் பெற்றதில் இருந்து நாடுகள் இரண்டும் நெருங்கிய பிணைப்பை பராமரித்து வருகிறது. நம் நாட்டு தலைவர்கள், அல்ஜீரியாவின் தலைவர்களுடன் எப்போதும் நல்ல முறையிலான உறவை கொண்டிருக்கின்றனர் என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக வளர்ச்சியில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற நிலையான வளர்ச்சியுடன், விரைவாக வளர்ந்து வரும் மிக பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருகிறது. நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது. உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகியிருப்பது பெருமைக்குரிய ஒரு விசயம் என்று அவர் பேசியுள்ளார்.