குரூப்-4 தேர்வில் பணியிடங்கள்: வதந்திகளை நம்ப வேண்டாம்: டிஎன்பிஎஸ்சி!

குரூப்-4 தேர்வு காலி பணியிடங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 15.92 லட்சம் பேர் எழுதினர். இதற்கிடையே, குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று, பணியிடங்கள் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், குரூப்-4 தேர்வு காலி பணியிடங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள விளக்க அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டு குரூப்-4 தேர்வில் போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து கேள்விகள் வருகின்றன. 2022-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு மூலம் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 3 நிதி ஆண்டுகளுக்கான 10,139 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது, சராசரியாக ஓராண்டுக்கு 3,380 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

தொடர்ந்து 2024-ல் குரூப்-4 தேர்வு மூலம் 2023-24, 2024-25 ஆகிய 2 நிதி ஆண்டுகளுக்கான 8,932 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஓராண்டுக்கு 4,466 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில், குரூப்-4 தேர்வு மூலம் சராசரியாக ஒரு நிதி ஆண்டுக்கு 1,086 வீதம் மொத்தம் 2,172 பணியிடங்கள் தற்போது கூடுதலாக நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு ஏற்கெனவே முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குரூப்-4 பணியிடங்கள் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளில் (நேர்காணல் அல்லாத பதவிகள்) உள்ள 654 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள் இன்று (அக். 14) தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் 45 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 161 மையங்களில் கணினி வழியில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 95,925 பேர் பங்கேற்கின்றனர். செல்போன் போன்ற மின்னணு கருவிகளை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல கூடாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.