தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 30 சதவீதம் போனஸ் வழங்குவது உட்பட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அக்., 16) முதல் அக்., 18 வரை கடையடைப்பு, தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது.
தமிழகத்தின் ரேஷன் கடைகளின் வாடகை, கரண்ட் பில், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு தமிழக அரசு வருடந்தோறும் மானியம் வழங்கி வருகிறது. கூட்டுறவு துறைக்கு வருடந்தோறும் 450 கோடி ரூபாயை மானியமாக வழங்கி வரும்நிலையில், இந்த மானியமானது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த மானியம் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை என்றும், அதனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் சங்கங்கள் நிதி நெருக்கடியில் திணறி வருவதாகவும் சமீபத்தில் சலசலப்புகள் எழுந்தன. எனினும் இதற்கு உரிய நடவடிக்கையை அரசு அப்போதே எடுத்திருந்தது.
அதேசமயம், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் பணியாளர்கள் போராட்டங்களை விடாமல் நடத்தி வருகிறார்கள். எனினும் தங்கள் கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படாத நிலையில், நாளைய தினமும் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றன. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் தினகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாளை அதாவது அக்டோபர் 16ம் தேதி முதல் அக்டோபர் 18 வரை கடையடைப்பு செய்து மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
ரேஷன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். எடை முறைகேடுகளை தவிர்க்க சரியான எடையில் தரமான உணவுப்பொருட்களை பொட்டலமாக கடைகளுக்கு வழங்க வேண்டும். கடைகளுக்கு 100 சதவீதம் உணவுப்பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொங்கல் தொகுப்பு வழங்கும் போது ஒரு ரேஷன்கார்டுக்கு ரூ.10 ஊக்கத்தொகை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் உட்பட 32 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இக்கோரிக்களை வலியுறுத்தி நாளை முதல் அக்டோபர் 18 வரை கடையடைப்பு செய்து மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.