வடகிழக்கு பருவமழையை தமிழக அரசு திறம்பட எதிர்கொள்ளும்: உதயநிதி ஸ்டாலின்!

வடகிழக்குப் பருவமழையை தமிழக அரசு திறம்பட எதிர்கொள்ளும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024’ இறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் கண்டுரசித்து, ஜூடோ விளையாட்டில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட 5 பிரிவுகளில் 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மண்டல அளவிலான போட்டிகளைத் தொடர்ந்து, மாநில அளவிலான போட்டிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இதில் 32,700 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருச்சி தவிரமேலும் 19 இடங்களில் 21 நாட்களுக்கு இறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. விளையாட்டு வீரர்கள், போட்டி நடுவர்கள், பயிற்சியாளர்கள், இதரஊழியர்கள் போட்டி நடைபெறும் இடத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 150-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தங்கும்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வரும் 24-ம்தேதி கோப்பைகளை முதல்வர் வழங்க இருக்கிறார். மழையினால் விளையாட்டுப் போட்டிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. முதல்வரும், அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த வடகிழக்குப் பருவமழையை தமிழக அரசு திறம்பட எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.